|
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பாடிய கணியன் பூங்குன்றனாருக்கு மகிபாலன்பட்டியில் வரலாற்று துாண் Apr 15, 21 |
|
|
|
மகிபாலன்பட்டியில் சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனாருக்கு அரசின் வரலாறு நினைவுத்துாண் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
சங்க இலக்கியம் தமிழில் கி.மு. 500ல் இருந்து கி.பி. 200 வரையில் எழுதப்பட்ட இலக்கியங்கள் ஆகும். 473 புலவர்களின் 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன. அதில் ஒருவர் கணியன் பூங்குன்றனார்.இவர் கணித்து பலன் கூறுவதில் வல்லவர் என்பதால் கணியன் என்றும், இவர் சார்ந்த திருப்புத்துார் மகிபாலன்பட்டி ஊராட்சி பூங்குன்ற நாடு என்பதால் கணியன் பூங்குன்றனார் என்று அழைக்கப்படுகிறார்.
சங்க இலக்கியத்தில் இவர் இயற்றிய பாடல்கள் இரண்டு உள்ளன. ஒன்று, புறநானுாற்றில் காணப்படும் 192ஆம் பாடல். மற்றொன்று நற்றிணையில் உள்ள 226ஆம் பாடல். அதில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பாடல் சர்வதேச புகழ் பெற்றது. கணியன் பூங்குன்றனார் பரந்த மனப்பான்மை உடையவர்; இன்ப துன்பங்களைச் சமமாகக்கருதியவர். மக்கள் அனைவரையும் தமது உறவினராகக் கருதியவர். பரிசு பெறுவதற்காக எந்த ஒரு மன்னரையோ அல்லது வள்ளலையோ புகழ்ந்து பாடாமல், இவர் உலக இயல்பைப்பற்றிய தம் கருத்தை இப்பாடலில் கூறியுள்ளார்.
'எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே ; நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை; துன்பமும் ஆறுதலும் கூட மற்றவர்தருவதில்லைசாதல் புதுமை யில்லை; வாழ்தல்; இன்பமென்று மகிழ்ந்ததுஇல்லை; வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை; பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போலஇயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று; தக்கோர் ஊட்டிய அறிவால்தெளிந்தோம்; ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்; சிறியோரை இகழ்ந்து துாற்றியதும் இல்லைபெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.' என்பதுதான் முழுமையான விளக்கம்.
இந்த பாடல் அமெரிக்கசிம்பொனி கலைஞர்களால் பாடப்பட்டு அமேசான் சர்வதேச இசைப் பட்டியலில் இடம்பெற்றது. 2019-ல் சிகாகோவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின் கீதமாக அறிவிக்கப்பட்டது. இந்த வாசகம் பல சர்வதேச நாடுகளின் முக்கிய இடங்களில் பொறிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு பெற்ற பாடலைப் பாடியஅந்தப் புலவருக்கு நீண்ட காலமாக நினைவகம் அமைக்க பலரும் கோரினர். தற்போது தமிழக அரசின்தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ரூ 10.33 லட்சம் மதிப்பில் நினைவுத்துாண் அமைக்கும் பணி நிறைவு பெற்று திறக்கப்படுவதற்காக உள்ளது.
source : Dinamalar |
|
|
|
|
|