Nagaratharonline.com
 
கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்தியர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல்?  May 25, 21
 
முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி மருந்தை உலக சுகாதார அமைப்பு அங்கீகரிக்காதால், அந்த தடுப்பூசியை போட்டுக்கொண்ட இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்படலாம். அவசர கால தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என்று உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அனுமதி பட்டியலில், கோவாக்சின் தடுப்பூசி மருந்து இதுவரை இடம்பெறவில்லை. இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள ஸ்புட்னிக் தடுப்பூசி மருந்தும் அவசர பயன்பாடு பட்டியலில் இடம்பெறவில்லை.

அதேசமயம் இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு மருந்து இடம்பெற்றுள்ளது. பைசர் பயோன்டெக், அஸ்ட்ராஜெனேகா, ஜான்சன் அண்ட் ஜான்சன், மாடர்னா, சினோபார்ம் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசி மருந்துகளும் உலக சுகாதார அமைப்பின் அனுமதி பட்டியலில் உள்ளன.

கோவாக்சின் மருந்தை உலக சுகாதார அமைப்பின் பட்டியலில் இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் கோவாக்சின் மருந்தின் செயல்திறன் குறித்த விரிவான தகவல்களுடன் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பு, கூடுதல் தகவல்களை கேட்டுள்ளது. இதையடுத்து தடுப்பூசி குறித்த கூடுதல் ஆவணங்களை பாரத் பயோடெக் சமர்ப்பிக்க உள்ளது. அதை உலக சுகாதார அமைப்பு மதிப்பீடு செய்து தனது முடிவை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.