|
பாகனேரியில் ஐயப்பன் சிலை பிரதிஷ்டை May 25, 10 |
|
சிவகங்கை,மே 24: சிவகங்கை மாவட்டம், பாகனேரியில் புதிதாக அமைக்கப்பட்ட ஐயப்பன் கோயிலில் சுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பந்தளராஜா வம்சாவளியினர் பங்கேற்றனர்.
பாகனேரி பழைய வளவு பருசப்புளித் தெருவில் இக்கோயில் உள்ளது. அவ்வூர் பிரமுகர் அ.சித.கணவேலாயுதம் செட்டியார் குடும்பத்தினர், ஐயப்பப் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் விரும்பியபடி கோயில் கட்டமைப்புப் பணிகள் கடந்த 8 மாதங்களாக நடைபெற்று வந்தது.
ரூ.10 லட்சம் செலவில் கோயில் கட்டி முடிக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் கன்னிமூல கணபதி சன்னதியும் இடம்பெற்றுள்ளது.
கோயிலில் ஐயப்பன் சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகப் பணிகள் சனிக்கிழமை துவங்கியது.
கோயில் அருகே யாகசாலை அமைக்கப்பட்டு, மதுரை கூடல் நகர் கல்யாணசுந்தரம் சிவாச்சாரியார் தலைமையில் 4 கால யாகம், கணபதிஹோமம், கோ பூஜை ஆகியவை நடத்தப்பட்டன.
திங்கள்கிழமை காலை கேரள பந்தள ராஜா பரம்பரை வம்சாவளியைச் சேர்ந்த ஆர்.ராமவர்மராஜா முன்னிலையில் ஐயப்பன் கற்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.
காலை 7 மணியளவில் சிவாச்சாரியார்கள் ஐயப்பன் கோயில் கோபுர கலசத்தில் புனத நீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். கன்னிமூல கணபதி சன்னதி கோபுர கலசத்திலும் கும்பாபிஷேம் செய்யப்பட்டது.
அப்போது கோயிலைச்சுற்றிலும் நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
ஐயப்பன் சிலைக்கு பால், தேன், சந்தன அபிஷேகங்கள் செய்து அலங்காரம் ஆராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பாகனேரி நாட்டார் மற்றும் நகரத்தார் சமூகத்தினர் திரளாக நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கும்பாபிஷேக அமைப்புப் பணிகளை அலங்காநல்லூர் ஸ்ரீதர்மசாஸ்தா ஆலய நிர்வாகி ஏ.எல்.ஸ்ரீனிவாசன் செட்டியார் செய்திருந்தார். டி.புகழேந்தி விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
Source:Dinamani |
|
|
|
|
|