|
சிவகங்கை மருத்துவக் கல்லூரி அடுத்த ஆண்டு முதல் செயல்பட நடவடிக்கை Jun 11, 10 |
|
மதுரை, ஜூன் 10: சிவகங்கையில் அடுத்த ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ஏ.எட்வின்ஜோ தெரிவித்தார்.
மதுரை மருத்துவக் கல்லூரி டீனாக இருந்த டாக்டர் கார்த்திகேயன் திருச்சி மருத்துவக் கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து சிவகங்கை மருத்துவக் கல்லூரி டீனாக இருந்த டாக்டர் ஏ.எட்வின்ஜோ மதுரை மருத்துவக் கல்லூரி டீனாக நியமிக்கப்பட்டு வியாழக்கிழமை பொறுப்பேற்றார். மேலும் சிவகங்கை மருத்துவக் கல்லூரி டீன் பொறுப்பையும் அவர் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையானது வரும் அக்டோபர் இறுதியில் 300 படுக்கை வசதி கொண்டதாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச்சில் இந்த மருத்துவமனையானது 500 படுக்கைகள் கொண்டதாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்த ஆண்டு முதல் சிவகங்கை மருத்துவக் கல்லூரி செயல்பட அனைத்து நடவடிக்கைகளும் இப்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை மருத்துவக் கல்லூரியில் கல்வித் தரத்தை உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
உயர் மருத்துவ ஆராய்ச்சிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கல்லூரியில் ராகிங்கைக் கண்காணித்து தடுக்க குழுக்கள் அமைக்கப்படும் என்றார்.
டாக்டர் ஏ.எட்வின்ஜோ மதுரை மருத்துவக் கல்லூரியில் 1978-ல் மருத்துவப்பட்டம் பெற்றார். பின்னர் 1986-ல் சட்ட மருத்துவத்தில் எம்.டி. பட்டம் பெற்றார். 1994-ல் இளம் பேராசிரியரானார். இவர் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களிலும் பணிபுரிந்துள்ளார்.
source : Dinamani |
|
|
|
|
|