Nagaratharonline.com
 
பெற்றோரின் கனவை ஏமாற்றிவிடாதீர் : சுப. வீரபாண்டியன்  Jul 3, 10
 
பெற்றோரின் கனவை பிள்ளைகளாகிய நீங்கள் ஏமாற்றிவிடாதீர்கள் என்றார் எழுத்தாளர் சுப. வீரபாண்டியன்.

திருமயம் அருகேயுள்ள ராயவரம் சுப்பிரமணியன் பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதலாண்டு வகுப்பு தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவர் மேலும் பேசியதுùô ""மாணவர்கள் ஆங்கிலத்தில் புலமை இல்லையே, நகர்ப்புற மாணவர்களோடு கிராம மாணவர்கள் ஈடுகொடுக்க முடியுமா என்ற தயக்கத்தை, தடையை உடைத்தெறிய வேண்டும். ஆயிரம் ஆண்டுகள் கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கிராமப்புறக் கூலித்தொழிலாளர்களின் குடும்பத்தில் பிறந்து படித்தவர்கள்தான் பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதை உணர வேண்டும்.

வறுமை வெற்றிக்குத் தடையல்ல. பிற மொழிகளைக் கற்றுக்கொள்வது என்பது தேவையையும் திறமையும் பொறுத்தே அமைகிறது.

வறுமையில் அகப்பட்டிருந்த மைக்கல் பாரடேதான் அறிவியலில் மகத்தான சாதனைகளைச் செய்தார். செவித்திறன் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில்தான் பீத்தோவன் தன்னுடைய வாழ்வின் மிக முக்கியமான இசைக் கோவைகளை படைத்தார்.

ஆகையால், நாம் இருக்கும் சூழல் எத்தனை மோசமானதாக இருந்தாலும், அதைத் தகர்த்தெறிய முடியும். தகர்த்தெறிய வேண்டும். அதுதான் சாதனையாளர்களை உருவாக்கும்.

பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுக்கு கிடைக்காதது, தங்களது பிள்ளைக்கேனும் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில்தான் பிள்ளைகளை கல்வி நிலையங்களுக்கு அனுப்புகிறார்கள். ஒவ்வொரு பிள்ளையின் கல்விக்குப் பின்னும் பெற்றோரின் ஆயிரமாயிரம் கனவுகள் ஒளிந்துகிடக்கின்றன. இதை மாணவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்'' என்றார் வீரபாண்டியன்.

விழாவுக்கு, கல்வி நிறுவன நிர்வாகி எம்.ஏ.எம். பழனியப்பன் தலைமை வகிக்தார். திருமயம் சட்டபபேரவை உறுப்பினர் ராம. சுப்புராம், நிர்வாகிகள் கா. சுப்பிரமணியன், எம்.ஏ.எம். காசி செட்டியார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

முன்னதாக, கல்லூரி முதல்வர் பி. சுப்பிரமணியன் வரவேற்றார். நிறைவில், துணை முதல்வர் வி. மீனாட்சிசுந்தரம் நன்றி கூறினார்.


source : Dinamani