Nagaratharonline.com
 
காரைக்குடியில் அதிமுக ஆர்ப்பாட்டம்  Jul 3, 10
 
காரைக்குடி, ஜூலை 2: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நகராட்சி நிர்வாகத்தின் குறைபாடுகளைக் கண்டித்து, மாவட்ட அதிமுக சார்பில் வெள்ளிக்கிழமை நகராட்சி அலு வலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காரைக்குடியில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 58 கோடி நிதி ஒதுக்கியதாக, திமுக அரசைப் பாராட்டி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் நகர்மன்றத் தில் தீர்மானம் நிறைவேற்றியும், இன்றுவரை இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. மேலும், நகராட்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. கொசு மருந்து அடிக்கவும், தெருநாய்களை ஒழிக்கவும் நிதி ஒதுக்கப்பட்டும், அத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

சாலைகள் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கப்பட்டும், பல்வேறு சாலைகள் குண்டும், குழியுமாகவே காணப்படுகின்றன.

நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில், ஆளுங்கட்சியினர் ஆக்கிரமித்துள்ளதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

காரைக்குடியில் குடிநீர் விநியோகம் சீராக நடைபெறவில்லை என்பது உள்ளிட்ட குறைகளைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, அதிமுக விவசாய அணி மாநிலச் செயலாளர் சோழன் சித. பழனிச்சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.கே. உமாதேவன் முன்னிலை வகித்தார்.

மதிமுக மாவட்டச் செயலாளர் புலவர் செவந்தியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ கற்பகம் இளங்கோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் பிஎல். ராமச்சந்திரன், மூவேந்தர் முன்னேற்ற முன்னணியின் சோமசுந்தரம், நகர்மன்ற காங்கிரஸ் உறுப்பினர் சி. மெய்யர், அதிமுக மாவட்ட அவைத்தலைவர் பா. காளிதாசு உள்ளிட்ட பலர் பேசினர்.

Source:Dinamani