|
காரைக்குடியை சுற்றி "சுற்றுலா நகர்' உலக வங்கி நிதியில் புது திட்டம்:ஆய்வு செய்ய உத்தரவு Jul 10, 10 |
|
காரைக்குடியை சுற்றியுள்ள ஒன்பது நகரத்தார் கோயில், 60 நகரத்தார் கிராமங்களை ஒன்றிணைத்து, "சுற்றுலா நகரம்' உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பங்களாக்கள் குறித்து கணக்கெடுக்க, நகர ஊரமைப்பு துறைக்கு (டவுன் பிளானிங்) அரசு உத்தரவிட்டுள்ளது. இப்பகுதியில் சர்வதேச கட்டட கலைக்கு சான்றாக செட்டிநாடு நகரத்தார் பங்களாக்கள் திகழ்கின்றன. கட்டப்பட்ட ஓரிரு ஆண்டுகளிலேயே விரிசல் விடும் கட்டடங்களுக்கு மத்தியில், நூற்றாண்டுகளை கடந்தும் பங்களாக்கள் பொலிவுடன் கம்பீரமாக காட்சி தருகின்றன. சுவர்கள் முட்டை ஓடு, சுண்ணாம்பு கலவை கொண்டு கட்டப்பட்டு, கண்ணாடி போல பளபளப்புடன் உள்ளன. நுழைவுவாசல் கதவு, நிலை பர்மா தேக்கினால் செய்யப்பட்டு, கதவுகளில் பெல்ஜியம் கண்ணாடி பதிக்கப்பட்டிருக்கும்.பாரம்பரிய பெருமை:இவற்றை காண ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால், "பாரம்பரிய சுற்றுலா நகரம்' என்ற பெருமையோடு, "யுனஸ்கோ' வரைபடத்தில் இடம் பெற்றுள்ளது. பங்களாக்களை பராமரிக்க ஒவ்வொருமுறையும் 30 முதல் 50 லட்சம் வரை செலவாகும். இதனால், பெரும்பாலான பங்களாக்கள் உரிய பராமரிப்பின்றி சிதிலம் அடைந்து விட்டன. சுற்றுலா நகரம்:இவற்றை பாதுகாத்து, சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க வேண்டும் என, ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதன்படி, கடந்த மூன்று ஆண்டுக்கு முன் அமைச்சர் பொன்முடி தலைமையில், "பாரம்பரிய பங்களா பாதுகாப்பு குழு' வை அரசு நியமித்தது. ஆனால் குழு செயல்படவில்லை. தற்போது, பங்களாக்களை பாதுகாக்க, உலக வங்கி நிதியுடன் "மெகா' திட்டத்தை செயல்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆய்வு பணிகளை மேற்கொள்ள, நகர் ஊரமைப்பு துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இத்படி, ஒன்பது நகரத்தார் கோயில்கள், 60 கிராமங்களை ஒன்றிணைத்து, "சுற்றுலா நகரம்' அமைக்கப்படும்.சிதிலமடைத பங்களாக்களை மூன்று வகையாக பிரித்து, . உலக வங்கி நிதி மூலம் பராமரிப்புக்கு உதவி வழங்கப்படும்.முதல் தர பங்களாவிற்கு 50 லட்சம், இரண்டாம் தரத்திற்கு 40, மூன்றாம் தரத்திற்கு 30 லட்சம் வரை வழங்கி பராமரிக்கவும்; சுற்றுலா பயணிகள் எளிதில், சுற்றிப்பார்க்க முக்கிய இடங்களுக்கு 60 அடி சாலை அமைத்தல் போன்ற செயல் திட்டங்கள், இதில் உள்ளன.இதற்கான ஆய்வு பணிகள் விரைவில் துவக்கப்பட உள்ளது.
source : Dinamalar |
|
|
|
|
|