|
அழகப்பச் செட்டியார் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் ஆக. 13, 14ல் சந்திப்பு Aug 11, 10 |
|
காரைக்குடி, ஆக. 10: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பச் செட்டியார் பொறியியல் கல்லூரியில் 1981-85 ஆம் ஆண்டுகளில் படித்து வெளியேறிய மாணவர்கள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் கல்லூரியில் சந்திக்கும் நிகழ்ச்சி வெள்ளி (ஆக. 13) மற்றும் சனிக்கிழமை (ஆக. 14) ஆகிய 2 நாள்கள் நடைபெறவிருக்கிறது. ரூ. 30 லட்சத்தில் புதிய கட்டடம் ஒன்றையும் கட்டி இந்த முன்னாள் மாணவர்கள் வழங்குகின்றனர்.
இதுகுறித்து விழா ஒருங்கிணைப்பாளர் சொ. ஆனந்தன் கூறியது:
இக் கல்லூரியில் 1981-85 ஆம் ஆண்டுகளில் 180 மாணவ, மாணவியர்கள் படித்தவர்களில் 120 பேர் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர். இவர்களில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.
இந்தியாவில் மத்திய, மாநில அரசு உயர் பொறுப்புகளில் பல்வேறு மாநிலஙகளிலும், பல்வேறு தனியார் நிறுவனங்களின் தலைவர்களாகவும் மற்றும் முக்கிய செயல் அதிகாரிகளாகவும், பல்வேறு தொழில்நுட்பக் கல்லூரிப் பேராசிரியர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
இத்தகைய மேன்மையை அடைய அடித்தளம் அமைத்துக் கொடுத்த தங்கள் கல்லூரியை வணங்கவும், 25 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் பழைய நண்பர்களை மீண்டும் பார்த்து பரவசமடையவும், ஆக. 13, 14 தேதிகளில் 2 நாள்கள் மீண்டும் கல்லூரியில் வாழ்ந்து பார்க்கும் மனநிலையிலும், தங்களது குடும்பத்துடன் வருகிறார்கள்.
இவ் விழாவில், பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. மேலும் 1981-85 மாணவர்களின் வெள்ளிவிழாக் கட்டடம் என்ற பெயரில் ரூ. 30 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டி வழங்கும் விழா சனிக்கிழமை காலை நடைபெறுகிறது.
இவ் விழாவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், கான்பூர் ஐ.ஐ.டி-யின் தலைவருமான முனைவர் மு. ஆனந்தகிருஷ்ணன் கட்டடத்தைத் திறந்து வைத்துப் பேசுகிறார். தமிழ்நாடு தொழில்நுட்ப இயக்ககத்தின் ஆணையர் குமார்ஜெயந்த் முன்னிலை வகிக்கிறார்.
மதுரை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் முருகேசன், அழகப்பா பொறியியல் கல்லூரி முதல்வர் சேகரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர் என்றார்.
Source:Dinamani |
|
|
|
|
|