|
கம்பன் கழக ஆண்டு விழா நாளை தொடங்குகிறது Aug 12, 10 |
|
சென்னை கம்பன் கழக ஆண்டு விழா ஆகஸ்ட் 13, 14, 15 தேதிகளில் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஏ.வி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. விழாவுக்கு முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லெட்சுமணன் தலைமை வகிக்கிறார்.
விழாவில் தமிழறிஞர்களுக்கு விருதுகள் மற்றும் நினைவுப் பரிசுகளும் மாநில அளவிலான இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.
அவற்றின் விவரம்: பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் (ஆழ்வார்கள் ஆய்வு மையம் வழங்கும் கம்பர் விருது), தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் டிஜிபி திலகவதி (பேராசிரியர் கே. சுவாமிநாதன் நினைவுப் பரிசு), கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் (நீதிபதி மு.மு. இஸ்மாயில் நினைவு பரிசு), கி. சுப்பிரமணியம் (கம்பன் குறித்த சிறந்த நூலுக்கான அ.ச.ஞா. நினைவுப் பரிசு), கவிஞர் மதிஒளி சரஸ்வதி (கி.வா.ஜ. நினைவுப் பரிசு), ஓவியர் மாருதி (டி. சதாசிவம் கம்பன் அடிப்பொடி நினைவுப் பரிசு), கே. ராமமூர்த்தி (ராதாகிருஷ்ணன் நினைவுப் பரிசு), ராம. லட்சுமணன் (மர்ரே எஸ். ராஜம் நினைவுப் பரிசு), கவிஞர் மதிவண்ணன் (க.கு. கோதண்டராமன் நினைவுப் பரிசு), தக்கலை பஷீர் (சீறாப்புராணப் பரிசு), கலை. செழியன் (கம்பன் அடிப்பொடி சா. கணேசனார் விருது), த. இலக்கியா (சாலமன் பாப்பையா பட்டிமன்றக் குழுப் பரிசு).
இதுதவிர, கம்பன் கழகம் நடத்திய மாநில அளவிலான இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
பேராசிரியர் ஆர்.மோகன் எழுதிய "கணினி யுகத்திற்கு கம்பன்' என்ற ஏ.வி.எம். அறக்கட்டளை சொற்பொழிவு புத்தகத்தை பேராசிரியர் சிற்சபேசன் வெளியிடுகிறார். முதல் பிரதியை மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி பெற்றுக் கொள்கிறார்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் விழாவில் உரையாற்ற உள்ளனர்.
கம்பன் கழகமும், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளியும் இணைந்து, மாதந்தோறும் கம்பன் கழகக் கூட்டங்களை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கம்பன் கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன் தெரிவித்தார்.
source : Dinamani |
|
|
|
|
|