Nagaratharonline.com
 
மாணிக்கம் செட்டியார் கொலை :தம்பதி கைது  Aug 25, 10
 
மதுரையில் நகை அடகு கடை உரிமையாளரை கொலை செய்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், 60 மணி நேரத்தில், எவர்சில்வர் பட்டறை உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை கைது செய்த போலீசார், 9 கிலோ நகை, ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 12 ஆயிரம் ரூபாய் மீட்டு சாதனை படைத்தனர். மதுரை மேலமாசிவீதி மேலஅகிழ்பாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம் செட்டியார்(66). வீட்டில் நகை அடகு கடை நடத்தி வந்தார். மனைவி சிகப்பி ஆச்சி ஆக.,19ல் திருப்பதிக்கு சென்றுவிட, வீட்டில் தனியாக இருந்த மாணிக்கம் செட்டியார், ஆக.,21 காலை கொலை செய்யப்பட்டு கிடந்தார். நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. கமிஷனர் பாலசுப்பிரமணியன், துணை கமிஷனர்கள் ஜெயஸ்ரீ, சின்னசாமி உத்தரவின்படி, உதவி கமிஷனர்கள் கணேசன், குலாம், ரவிக்குமார் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.



முதலில் கிடைத்த "க்ளு" :அடகு வைத்தவர்களின் பெயர், விபரங்களை பதிவேட்டில் மாணிக்கம் குறித்து வைப்பது வழக்கம். அடகு வைத்திருந்த 25 பேரை விசாரணைக்கு அழைத்தபோது, மதுரை அழகப்பன் நகரைச் சேர்ந்த ராஜூ(36) மட்டும் வரவில்லை. வீட்டில் விசாரித்தபோது, மனைவி கார்த்திகா(34), முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறியது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ராஜூ மொபைல் போன் "சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. அவரது மொபைல் போனின் "ஐ.எம்.இ.ஐ.," நம்பரை கண்காணித்தபோது, மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. நேற்று முன் தினம் இரவு போலீசார் அவரை கைது செய்தனர். இரு சணல் பைகளில் இருந்த 9 கிலோ நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 12 ஆயிரம் ரூபாயை மீட்டனர். கொலைக்கு உடந்தையாக இருந்ததாக மனைவி கார்த்திகாவும் கைது செய்யப்பட்டார்.



கொலை நடந்தது எப்படி? : எவர்சில்வர் பட்டறை தொழிலாளியான ராஜூ, ஆறு மாதங்களுக்கு முன் சொந்தமாக பட்டறை துவக்கினார். இதற்காக சிலரிடம் 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். தவிர, மூன்றரை ஆண்டுகளாக மாணிக்கத்திடம் நகையை அடகு வைப்பதும், மீட்பதுமாக இருந்தார். கடன்காரர்கள் நெருக்க ஆரம்பித்தனர். அடகு வைப்பதற்கு நகையும் இல்லாத சூழலில், மாணிக்கம் வீட்டில் திருட ராஜூவும், கார்த்திகாவும் திட்டமிட்டனர். கணவன், மனைவி "ரிகர்சல்' :ஆக.,13 முதல் எப்படி திருடுவது, எப்படி வெளியேறுவது என்பதை "ரிகர்சல்' செய்வதற்காக, நகையை அடகு வைப்பது போல் மாணிக்கம் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தனர். ஆக.,19ல் மாணிக்கம் மனைவி சிகப்பி ஆச்சி திருப்பதிக்கு செல்ல, அன்றிரவே நகையை மீட்பது போல் கணவன், மனைவியும் மாணிக்கத்திடம் சென்றனர்.



ஆனால் மறுநாள் வருமாறு அவர்களை திருப்பி அனுப்பினார். ஆக.,20 இரவு 7.30 மணிக்கு மீண்டும் இருவரும் மாணிக்கத்திடம் சென்றனர். நகையை எடுத்து கொடுப்பதற்குள், "நான் அவசரமாக வெளியே செல்கிறேன். மனைவியிடம் நகையை கொடுத்து விடுங்கள்' என்று ராஜூ கூறிவிட்டு, வெளியேறுவது போல், வீட்டு மாடி கழிப்பறையில் பதுங்கி கொண்டார். அன்றிரவு ஒரு மணிக்கு, மாணிக்கம் தூங்கிக் கொண்டிருந்தார். மாடியில் இருந்து இறங்கிய ராஜூ, நகைகளை திருட முயன்றார். சத்தம் கேட்ட மாணிக்கம் சத்தம் போட, சமையல் அறையில் இருந்த சிறு கத்தியால் மாணிக்கத்தின் கழுத்தில் குத்தினார். பின், சோபா தலையணையை எடுத்து, மாணிக்கம் முகத்தில் வைத்ததோடு, அதன்மீது ஆட்டுக்கல் குழவியை வைத்து அழுத்த, மாணிக்கம் இறந்தார்.



மாறுவேடத்தில் ராஜூ : இரு சணல் பைகளில் நகை, வெள்ளிப் பொருட்கள், பணத்தை எடுத்துக்கொண்டு தனது வீட்டிற்கு வந்தார். மனைவி கார்த்திகாவிடம் 17 பவுன் நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாயை கொடுத்த ராஜூ, தனது விரல்களுக்கும் மோதிரம் அணிந்துக்கொண்டார். பின், மதுரை முத்துப்பட்டியில் வாடகை வீட்டில் நகைகளை பதுக்கினார். நகையை எப்படி பணமாக மாற்றுவது என்று தெரியாமல் முழித்த ராஜூ, நகைகளுடன் டவுன் ஹால் ரோடு பகுதி ஓட்டல்களில் தங்கினார். போலீசார் அடையாளம் காணக்கூடாது என்பதற்காக அழகர்கோவிலில் மொட்டை அடித்துக் கொண்டார். ஆனால் மொபைல் போன் உதவியால் போலீசில் சிக்கிக்கொண்டார். அவரிடம் மீட்கப்பட்ட 1150 பவுன் நகைகளின் மொத்த மதிப்பு ஒரு கோடியே 60 லட்சத்து, 41 ஆயிரத்து 568. சுமார் 60 மணி நேரத்தில், நகைகளை மீட்ட போலீசாரை நேற்று சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன், ஐ.ஜி., அபய்குமார் சிங்(பொறுப்பு), கமிஷனர் பாலசுப்பிரமணியன் பாராட்டினர்.



கொள்ளைக்கு வழிவகுத்த மாணிக்கம் : மாணிக்கத்திடம் பலரும் நகைகளை அடகு வைத்துள்ளனர். அதை மீட்க வரும்போது, அடகு நகைகள் அனைத்தையும் பரப்பி, அதில் சம்பந்தப்பட்டவரின் நகையை மாணிக்கம் எடுத்துக் கொடுப்பது வழக்கம். அடிக்கடி ராஜூ நகையை மீட்கும்போதெல்லாம், இதே முறையை மாணிக்கம் கையாண்டுள்ளார். இதுவே ராஜூவுக்கு திருடும் எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏ.டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் கூறுகையில், ""இதுபோன்று நகையை அடகு பெறுபவர்கள், அதை இன்சூரன்ஸ் செய்வது நல்லது. கடை உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு காமரா பொருத்த வேண்டும்,'' என்றார்.



மதுரையில் இதுவே முதன்முறை : ராஜூவிடம் 252 செயின்கள்(3632 கிராம்), 28 கைசெயின்(264 கிராம்), 27 நெக்லஸ்கள்(595), 546 தோடுகள்(2316), 426 மோதிரங்கள் (1350), 24 வளையல்கள் (462), 9 தண்டட்டி(240), 126 மாங்காய் காசுகள்(135), வெள்ளிப் பொருட்கள் (1279) மற்றும் 7,000 ரூபாய் மீட்கப்பட்டது. மனைவியிடம் 142 கிராம் தங்க நகைகள், 5 ஆயிரம் ரூபாய் மீட்கப்பட்டது. ராஜூ கொள்ளையடித்த பணம் 16 ஆயிரம் ரூபாய். ஓட்டல்களில் தங்குவதற்கு 4 000 ரூபாய் செலவழித்தது போக, மீதமுள்ள பணத்தை அவரிடமும், மனைவியிடமும் போலீசார் மீட்டுள்ளனர். மதுரை நகர் போலீஸ் வரலாற்றில், ஒருவரிடமிருந்து ஒரே நேரத்தில் ரூ.1.60 கோடி மதிப்புள்ள நகைகளை மீட்ட சம்பவம் இதுமட்டும்தான்.



source : Dinamalar