|
பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா Sep 12, 10 |
|
திருப்பத்தூர், செப். 11: சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சனிக்கிழமை சதுர்த்திப் பெருவிழா நடைபெற்றது.
இக் கோயில் சதுர்த்திப் பெருவிழா செப். 2-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சனிக்கிழமை காலை 10 மணிக்கு தங்க மூஷிக வாகனத்தில் குளக்கரையில் சுவாமி எழுந்தருளினார். அங்கு விநாயகரின் சக்தி ஸ்தலமான அங்குசத் தேவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீர்த்தக் குளத்தில் அங்குசத் தேவருக்கு சதுர்த்தி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
பின்னர் உச்சிகால பூஜையின்போது விநாயகருக்கு முக்குறுணிக் கொழுக்கட்டை படைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் கோனாபட்டு அருணாச்சலம் செட்டியார், அரிமளம் சிதம்பரம் செட்டியார் ஆகியோர் செய்திருந்தனர். சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதியை பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்றத்தினர் செய்திருந்தனர்.
Source:Dinamani |
|
|
|
|
|