|
காரைக்குடி பகுதியில் பிச்சைக்காரர்கள் தொல்லையால் சுற்றுலா பயணிகள் முகம் சுளிப்பு Oct 5, 10 |
|
காரைக்குடி : காரைக்குடி பகுதியில் வலம் வரும் பிச்சை எடுப்பவர்களின் தொல்லை அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது.
சமீபகாலமாக, காரைக்குடி, பள்ளத்துர், கொத்தமங்கலம், கானாடுகாத்தான் பகுதிகளில் பிச்சை எடுப்போர் அதிகரித்து வருகின்றனர். இங்குள்ள சிறப்பு வாய்ந்த அரண்மனை வீடுகளை காணவரும் வெளிநாட்டு மற்றும் வெளிமாநில பயணிகளை குறி வைத்து பிச்சைக்காரர்கள் வலம் வருகின்றனர்.
காரைக்குடியை பொறுத்தமட்டில், புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டில் பிச்சை எடுப்போர் நடமாட்டம் அதிகம் உள்ளது.பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, அரியக்குடி கோயில்கள், அழகப்பா பல்கலை., சிக்ரி, உள்ளிட்ட ஆய்வகம், கல்வி நிறுவனங்கள் முன்பும் பிச்சைக்காரர்கள் நடமாட்டம் உள்ளது. வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் இங்கு முகாமிட்டு பிச்சை எடுக்கின்றனர்.
குறிப்பாக, பெண்கள் கையில் குழந்தையோடு சுற்றுலா தலங்கள், பஸ் ஸ்டாண்டுகளில் அதிகாலையிலேயே பிச்சை எடுக்க துவங்கி விடுகின்றனர். பஸ் பயணிகள், சுற்றுலா பயணிகளிடம் இவர்கள் விடாப்பிடியாக வசூல் செய்கின்றனர். இதில் சிறுவர், சிறுமிகளையும் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதிலும் வெளிநாட்டு பயணிகள் என்றால், அவர்களை முற்றுகையிட்டு விடுகின்றனர். அவர்களிடம் இருந்து மீள்வதற்குள் போதுமென்றாகி விட்டது.
திருப்பூரை சேர்ந்த சுற்றுலா பயணி சண்முகம் கூறுகையில், ‘கையில் குழந்தையுடன் வரும் வடமாநில பெண்கள், ‘சில்லரை இல்லை என்று கூறினால் கூட விடாப்படியாக வசூல் செய்து விட்டுதான் செல்கின்றனர். இவர்களின் தொல்லையால் பஸ்சின் உள்ளேயும் அமர முடியவில்லை, வெளியேயும் நிற்க முடியவில்லை. இவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றார்.
பிளக்ஸ் பிரிண்டர்ஸ் கடை நடத்தும் சுதர்சன் ஸ்ரீனிவாசன் கூறுகையில், ‘கைக்குழந்தையுடன் பெண்களும், முதியவர்களும், 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் பிச்சை எடுக்க வருகின்றனர். இதனால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும் தொல்லை அதிகமாக உள்ளது‘ என்றார்
Source:Dinakaran |
|
|
|
|
|