Nagaratharonline.com
 
நெரிசலில், திணறும் திருப்புத்தூர்: தொலைநோக்கு திட்டங்கள் தேவை  Oct 5, 10
 
திருப்புத்தூரில் வாகன நெரிசலால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, திருச்சி, ராமேஸ்வரம் நகர்களின் சந்திப்பான இங்கு, வாகனங்களின் வரத்து அதிகமாக உள்ளது. பஸ் ஸ்டாண்ட்- அண்ணாத்துரை சிலை ரோட்டில் வியாபார நிறுவனங்கள் உள்ளன. இந்த ரோட்டில் வாகனங்கள் அதிகரித்துள்ளன. ரோட்டோரங்களில் வாகனங்கள் நிறுத்தத்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ரோட்டோரத்தில் இரு சக்கர வாகன நிறுத்தத்தை தற்போது போலீசார் ஏற்படுத்தியுள்ளனர். இதனால் ஓரளவு போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. போதிய விழிப்புணர்வு இல்லாத வாகன ஓட்டிகளால் சிக்கல் ஏற்படுகிறது. இது ஒரு தற்காலிகமான ஏற்பாடாகவே உள்ளது. அதிகரித்து வரும் வாகனங்கள் எண்ணிக்கை, நான்கு சக்கர வாகனம் நிறுத்தப்படுவது, குறுகலான ரோடு என வாகன நெரிசலால் இப்பகுதி திணறுகிறது. தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்ட பின் பராமரிப்பில்லாமல் குண்டும் குழியுமாக குளறுபடியை மேலும் அதிகரித்துள்ளது. இதேபோல பெரியகடை வீதி, வாணியங்கோவில் தெருவிலும் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது. நெரிசலை குறைக்க தொலைநோக்கு திட்டம் அவசியமானது. ஒரு வழிப்பாதை ஏற்படுத்துவது, பேரூராட்சி சார்பில் கூடுதலாக வாகன நிறுத்தம் ஏற்படுத்துவது, மாற்று ரோடுகளை உருவாக்குவது போன்றவை குறித்து அனைத்து தரப்பினரும் ஆலோசிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. வெளியூர் வாகனங்கள் நகரினுள் வராமல் தவிர்க்க திருச்சி, காரைக்குடி, கல்லல், சிவகங்கை ரோடுகளை இணைக்கும் புறவழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலையினர் திட்டமிட்டுள்ளனர். சிவகங்கை, மதுரை ரோட்டை இணைக்கும் குறிஞ்சி நகர் ரோடும் 45 லட்சம் மதிப்பில் போடப்பட உள்ளது. மதுரை, திண்டுக்கல், பொன்னமராவதி ரோடுகளை புறவழிச் சாலையுடன் இணைத்தால் நெரிசல் குறையும். தேசிய நெடுஞ்சாலையினர் கவனம் செலுத்த வேண்டும்.


source : Dinamalar