Nagaratharonline.com
 
தமிழன் தன் வரலாற்றைப் பதிவு செய்யவில்லை - பொன்னம்பல அடிகளார்  Oct 14, 10
 
தேவகோட்டை, அக். 13: தமிழன் தனது பெரும்பாலான வரலாற்றைப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டான், இதனால் தான் பல உண்மைகள் மறைக்கப்பட்டுவிட்டன குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் ஆறாவயலில் செவ்வாய்க்கிழமை பெரியண்ணன் எழுதிய "தமிழக வரலாறும் மறைக்கப்பட்ட உண்மைகளும்' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பேசியபோது குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் இவ்வாறு கூறினார். அவர் மேலும் பேசியது:

தமிழக வரலாறு குறித்து நீண்ட நெடிய விளக்கங்களை இந்த நூல் பதிவு செய்துள்ளது. தமிழன் அதிக வரலாறு படைத்துள்ளான். ஆனால், அவற்றைப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டான்.

பல ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோயிலை ராஜராஜ சோழன் கட்டியுள்ளதாக கல்வெட்டு உள்ளது. அதில் பெரிய அதிசயம் என்னவெனில், இந்த பணியைச் செய்த தலைமைத் தச்சன் முதல் கடைநிலை ஊழியன் வரை அனைவருக்கும் ராஜ ராஜ சோழன் பட்டத்தை வழங்குவதாக அறிவித்து, அதை பொறித்தும் வைத்துள்ளான்.

இப் பகுதியில் உள்ளது செம்பொன்மாரி. விடுதலைப் போரின்போது சோழனுக்கும், பாண்டியனுக்கும் போர் நடைபெற்று, அதில் சோழர்கள் வெற்றி பெற்றதற்கான கல்வெட்டு இங்கு உள்ளது. இதுபோல் பெரிய விஷயங்களை இந்த சிறிய நூலில் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.

ஒரு காலத்தில் வெள்ளையர்களை எதிர்ப்பதற்காக மருது சகோதரர்கள் காடுகளில் பதுங்கி இருந்தபோது, வெளியே வராவிட்டால் பெரிய கோயிலை வெடிவைத்துத் தகர்த்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். தான் பிடிபட்டாலும், தனது ஆட்சி போனாலும் பரவாயில்லை எனக் கருதி வெளியில் வந்து எதிர்கொண்டு கோயிலைக் காப்பாற்றியதாக வரலாறு தெரிவிக்கிறது. அந்த கோயிலில் தேர் ஒன்று செய்ய நினைத்து, குப்பமுத்து ஆசாரி என்பவரை அணுகியபோது அவர் முதலில் மறுத்து விட்டார். பிறகு அவரைக் கட்டாயப்படுத்தி தேரைச் செய்து, வெள்ளோட்டம் விடும் நாளில், தேர் நகரத் துவங்கியபோதுதான் "கோட்டக் கூலியை இன்னும் தரவில்லையே மன்னா' எனக் கேட்டுள்ளார்.

"உடனே கேள் தருகிறேன்' என் மருது சகோதரர்கள் ஹகூற, "இன்று ஒருநாள் மட்டும் நான் இந்த நாட்டுக்கு மன்னனாக இருக்க வேண்டும்' எனச் சொன்னவுடன், தனது மணிமுடியைத் துறந்து அவருக்கு முடிசூட்டியுள்ளனர் மருது சகோதரர்கள்.

தேர் சென்று கொண்டிருக்கும் போதே குப்பமுத்து ஆசாரி தேரிலிருந்து விழுந்து சக்கரத்தில் நசுங்கி உயிரை விடும் நேரத்தில் மருது சகோதரர்களை நோக்கி, "தேரைச் செய்தால் தங்களது உயிர் போய்விடும் என்பதால்தான் நான் முதலில் மறுத்தேன்.

நீங்கள் கட்டாயப்படுத்தவே நான் மன்னனாக இருந்து உயிரைவிட்டு உங்களைக் காப்பாற்றியுள்ளேன்' எனக் கூறியுள்ளார். இந்த வரலாறு இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல பல வரலாறுகள் நமக்கு தெரிந்தும், பதிவு செய்யாததால் மறைக்கப்பட்டும் உள்ளன என்று பொன்னம்பல அடிகளார் தெரிவித்தார்.

முன்னதாக, நூலை பொன்னம்பல அடிகளார் வெளியிட, எம்.எல்.ஏ ராமசாமி பெற்றுக் கொண்டார். உத்தமன் செட்டியார் தலைமை வகித்தார். பி.ஆர். சந்திரன் முன்னிலை வகித்தார். சேவுகன் செட்டியார் வரவேற்றார். கவிஞர் அரு.சோமசுந்தரன் துவக்க உரையாற்றினார். பிச்சப்பன், பேராசிரியர் ஆறுமுகம், அம்பலத்தரசு ஆகியோர் வாழ்த்தினர். பெரியண்ணன் நன்றி கூறினார்.


Source:Dinamani