|
தனித்தீவாக தத்தளிக்கும் கண்டரமாணிக்கம் Oct 16, 10 |
|
கண்டரமாணிக்கத்தில் போதிய பஸ் வசதி இன்றி பள்ளி, கல்லூரி மாணவர்கள் நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கத்தை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. தினமும் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்விக்காக திருப்புத்தூர் வருகின்றனர். அரசு அலுவலக பணிகள், வியாபார நிமித்தமாகவும் இப்பகுதியினர் திருப்புத்தூர் வர வேண்டியுள்ளது.ஆனால் காலை 7.45, 9.15 மணி என இரு பஸ்கள் மட்டுமே கல்லல்- திருப்புத்தூர் வழி செல்கின்றன. மற்றொரு பஸ் காரைக்குடியில் இருந்து கூத்தகுடி வழி, காலை 7.30 மணிக்கு வருகிறது. காலையில் ஒன்றரை மணி நேரம் வரை, பஸ் இன்றி அனைவரும் திணறுகின்றனர்.இந்த பஸ்களில் மாணவ, மாணவிகள் நெருக்கடியில் பயணிக்கின்றனர். பஸ் நிறைந்து விடுவதால் குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டுமே நிற்கிறது. இதனால் கிராமத்தினர் சிரமப்படுகின்றனர். அதே போல திருப்புத்தூரில் இருந்து இரவு 7 மணிக்கு மேல், இரண்டு மணி நேரம் வரை கண்டரமாணிக்கம் வழி, பஸ்கள் இல்லை. இதனால், வெளி இடங்களுக்கு சென்று ஊர் திரும்புவதும் சிரமமாக உள்ளது. இதை தவிர்க்க, கண்டரமாணிக்கத்தில் இருந்து காலை 8.30 மணிக்கும், இரவு 8 மணிக்கு திருப்புத்தூரில் இருந்தும் பஸ் இயக்கலாம்.மதியம் 1 மணி, இரவு 8.45 மணிக்கு வந்த தனியார் பஸ், சமீபத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த வழி, அரசு பஸ் இயக்கவும் கிராமத்தினர் கோரியுள்ளனர்.
source : Dinamalar |
|
|
|
|
|