Nagaratharonline.com
 
வெளிநாடு பறக்கும் செட்டிநாடு பலகாரம் தயாரிப்பு பணி ஜரூர்  Oct 20, 10
 
தீபாவளியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், செட்டிநாடு பலகாரம் தயாரிப்பு பணி சூடுபிடித்துள்ளது. செட்டி நாட்டினரின் பிரமாண்ட வீடுகள், விருந்தோம்பல், பழக்க வழக்கங்களை போலவே, இவர்களின் பாரம்பரிய பலகாரங்களும் பிரசித்தம். தேன்குழல், கை முறுக்கு, அதிரசம், மாவு உருண்டை, மணகோலம், மைசூர் பாகு, சீப்பு சீடை, உப்புச் சீடை, மகிழம்பு முறுக்கு என நாக்கு சொட்ட வைக்கும். காரைக்குடி, கானாடுகாத்தான், கண்டனூர், கோட்டையூர், மாத்தூர், சுற்றுப்பகுதிகளில் நூறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், செட்டிநாடு பலகாரம் தயாரிப்பதை, குடிசை தொழிலாக செய்து வருகின்றனர். இவற்றிக்கு தமிழகம் முழுவதும் வரவேற்பு இருப்பதால், தீபாவளியை முன்னிட்டு தொழில் விறுவிறுப்பு அடைந்துள்ளது.



மொத்தமாக பலகாரங்களை தயாரித்து கொடுக்கின்றனர். இதற்காக ஒவ்வொருவர் வீட்டிலும் மாவு அரவை இயந்திரம் பொருத்தியுள்ளனர். மற்ற பொருட்களை கைப்பக்குவத்தில் தயாரிக்கின்றனர். கைகப்பக்குவமே சுவைக்கு காரணம். ஒரு எண்ணெய் வகைகளை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்துவதில்லை. இதனால் நீண்ட நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.செட்டிநாடு பலகாரத்தில் சிறப்பு பெற்றது கைச்சுற்று முறுக்காகும். இடியாப்பம், பிட்டு, அதிரசம், ஆடிக்கூழ் தயாரிக்கும் மாவு, மிளகு, இட்லி பொடியும் அதிகளவில் தயாராகின்றன. வெளிநாடுகளில் கால் பதித்த செட்டிநாட்டினருக்காக, இங்கு தயாராகும் பலகாரங்கள் அனுப்பப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து "செக்', "டிடி' யாக, பலகாரம் தயாரிப்பவர்களுக்கு அனுப்புகின்றனர். இதன்படி, பலகாரங்கள் பிரத்யேக பாத்திரங்களில் அடைக்கப்பட்டு, வெளிநாடு பறக்கின்றன.

source : Dinamalar