|
பத்திரப்பதிவில் "டோக்கன்' முறை Oct 27, 10 |
|
சிவகங்கை: பத்திரப்பதிவு அலுவலகங்களில் நவ., 1 ம் தேதி முதல், டோக்கன் முறை அறிமுகமாகிறது. இதில் கர்ப்பிணி, முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். "ரியல் எஸ்டேட்' தொழில் விஸ்வரூபம் எடுத்து வருவதால், பத்திரப்பதிவு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பதிவுதாரர்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றனர். இதை தவிர்க்க "டோக்கன்' முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. விதிமுறைகள்: இதன்படி, பதிவுக்கு மூன்று நாளுக்கு முன், மாலை 4 முதல் 5.30 மணிக்குள், சார் பதிவாளர் அலுவலகத்தில் டோக்கன் பெறவேண்டும். நில ஆவண நகல், வாங்குவோர் அல்லது விற்பவரின் அடையாள அட்டை (ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்டவை) கொடுக்க வேண்டும். பதிவு நாளில் காலை 10 முதல் 11 மணிக்குள், பத்திர ஆவணங்களை வழங்க வேண்டும். உத்தரவாதம் அல்ல: முன்பே டோக்கன் பெறாமல் பதிவு நாளான்று வருவோர், பத்திரத்தை, சார் பதிவாளரிடம் கொடுத்து, டோக்கன் பெற வேண்டும்; பிற்பகல் 2 மணி வரை மட்டுமே தரப்படும். டோக்கன் வழங்குவது பதிவுக்கான முன்னுரிமை தான்; உத்தரவாதம் அல்ல. ஒரு பதிவுக்கு ஒன்று என்ற அடிப்படையில், ஒரு நபருக்கு 5 டோக்கனுக்கு மேல் வழங்க கூடாது. பதிவு நாளான்று, தகவல் பலகையில், முன்னுரிமை வரிசை எழுதப்படும். எச்சரிக்கை: இம்முறைப்படி தான், சார் பதிவாளர்கள் டோக்கன் வழங்கி, பதிய வேண்டும். பத்திர எழுத்தர், தரகர்களுக்கு டோக்கன் வழங்க கூடாது. முறையாக பின்பற்றாத, அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். என, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
source : Dinamalar |
|
|
|
|
|