Nagaratharonline.com
 
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குட்டிக் கதவுக்கு பூஜை ஆச்சரியம்  Oct 30, 10
 
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சிலைகளுக்கு பூஜைகள் நடந்து வரும் நிலையில், 2 அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட குட்டிக்கதவை தங்கள் குலதெய்வமாக கருதி, பட்டர்கள் வணங்கி பூஜை செய்து வரும் ஆச்சரியம் தினமும் நடக்கிறது. இக்கோயிலின் ஒவ்வொரு பகுதியும் அதிசயம் தான். காரணம் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பலரால் விரிவுப்படுத்தப்பட்டது. இதனாலேயே, உலக அதிசயங்களில் ஒன்றாக மக்கள் மனதில் பதிந்தது. இங்கு பட்டர்கள் இரு வகைகளாக இருக்கின்றனர். உக்கிரபாண்டி பட்டர் வகையறாக்கள், மூலஸ்தானத்தில் பூஜை, அலங்காரம், அபிஷேக பணிகளையும், குலசேகர பட்டர் வகையறாக்கள் உற்சவர் அலங்காரம், திருவிழா காலங்களில் சுவாமிக்கு நகைகளை தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டு மீண்டும் ஒப்படைக்கும் பணிகளையும் செய்து வருகின்றனர்.



இதில், குலசேகர் பட்டர் வகையறாக்கள், தங்கள் குலதெய்வமாக கருதி, குட்டிக்கதவு ஒன்றுக்கு தினமும் பூஜை செய்து வருகின்றனர். அந்த கதவு சுவாமி சன்னதியில் யாழி கிணறு அருகே "ஸ்ரீபொற்படியான்' என்ற பெயரில் இருக்கிறது. இந்த கதவுக்கு பின்னால் 6க்கு 8 அடி அகலத்தில் அறை உள்ளது. இதன் பின்னணி குறித்து பட்டர் ஒருவர் கூறியதாவது :இந்த அறை சுரங்க பாதையாக இருந்ததாகவும், இங்கிருந்து திருமலை நாயக்கர் மகாலுக்கும், மாரியம்மன் தெப்பக்குளத்திற்கும் செல்ல வழி இருந்ததாகவும் கூறப்பட்டதுண்டு. மதுரையில் உலகத்தமிழ் மாநாடு நடந்த சமயத்தில், இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் அறை மட்டுமே இருந்தது. சுரங்கபாதை தென்படவில்லை. இருப்பினும், இங்கு ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று பட்டர்கள் கருதி, அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பணசாமி கதவுக்கு பூஜை செய்வது போல், இங்கும் கதவுக்கு மட்டும் பூஜை செய்கின்றனர். குலத்தெய்வமாக வழிப்படுகின்றனர். தற்போது, நடராஜர் சன்னதி அருகே பட்டர்கள் தங்கள் பொறுப்பில் எடுக்கும் சுவாமி நகைகளை பாதுகாக்கும் கருவூலம் இருக்கிறது. அந்த காலத்தில் சுவாமி நகைகளை பாதுகாக்கும் கருவூலமாக அந்த அறை இருக்கலாம், என கருதுகிறோம், என்றனர்.