|
முத்து குழுமத்தின் 100-வது இலவச மருத்துவ முகாம் Oct 31, 10 |
|
முத்து குழுமத்தின் 100-வது இலவச மருத்துவ முகாம், முத்து மருத்துவமனை திறப்பு விழா, முத்து பார்மஸியின் 40-வது ஆண்டு தொடக்க விழா, நவீன இதய சிகிச்சைப் பிரிவு தொடக்க விழா ஆகியவை சென்னை புளியந்தோப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் க.அன்பழகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, முத்து மருத்துவமனை மற்றும் அழகியல் மருத்துவப் பிரிவையும் தொடங்கி வைத்துப் பேசியது: முத்து குழுமத்தின் முதல் மருந்தகம் திறப்பு விழா தொடங்கி இவர்களின் 100-வது மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளைத் தொடங்கி வைத்துள்ளேன்.
மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகள் நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள், மருத்துவ வசதிகள் உள்ளிட்டவற்றை உரிய தரத்தோடு வழங்க வேண்டும். மருந்துகளின் காலாவதி தேதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கவனித்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். அவ்வாறு தரமான சிகிச்சை அளிக்கப்படுவதாலேயே முத்து குழுமம் 40 ஆண்டு காலமாக மக்கள் மனத்தில் இடம்பிடித்துள்ளது என்றார் அவர்.
சுகதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 100-வது இலவச முகாமைத் தொடங்கி வைத்தார்.
அவர் பேசியது: முத்து மருந்தகம் எப்போதும் சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும். தரமான மருந்துகளையும், சேவையையும் செய்வதாலே மக்கள் மனத்தில் இடம் பிடித்துள்ளது என்றார் அவர். முத்து மருத்துவமனையில் உள்ள நவீன இதய சிகிச்சை கருவியான இஇசிபி-ஐ எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிமுகப்படுத்தினார்.
மேலும் அவர் பேசியதாவது: மருத்துவமனையைத் திறக்கும்போதே நவீன கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது மிகவும் சிறந்த செயலாகும். பொதுவாக பெரிய மருத்துவமனைகளில் மட்டுமே இத்தகைய நவீன மருத்துவக் கருவிகளைக் காண முடியும். இந்த கருவியின் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமலேயே, இதய ரத்தக் குழாய்களில் ஏற்படும் சிறிய அடைப்புகளைச் சரி செய்ய முடியும். இதன் மூலம் பொதுமக்கள் மிகவும் பயனடைவார்கள் என்றார் அவர்.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லெட்சுமணன், முத்து மருந்தக அறக்கட்டளை நிறுவனர் இ.ஞானம், முத்து மருத்துவமனை இயக்குநர்கள் டாக்டர் எம்.வி.ஸ்ரீலதா, ராதா பிரகாஷ், டாக்டர் எஸ்.சொக்கலிங்கம், முத்து மருந்தகத்தின் துணைத் தலைவர் எஸ்.சீனிவாசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
source : Dinamani |
|
|
|
|
|