Nagaratharonline.com
 
கோயில் எழுப்பியவருக்கு கோயிலில் இடமில்லை  Nov 7, 10
 
ஒன்றல்ல, இரண்டல்ல ஆயிரம் ஆண்டுகள் முடிந்துவிட்டன. தஞ்சைத் தரணியில் ராஜராஜனின் கலைப்படைப்பு கம்பீரமாய் நம் கண் முன்னே நிற்கிறது.

அண்மையில் அமர்க்களமாய், ஆடம்பரமாய் ஒரு விழா நடைபெற்று முடிந்த பின்னரும், அவரோ தான் எழுப்பிய அதிசயத்தின் அருகில் பிரதிபலன் எதிர்பாராதவரைப்போல நிற்கிறார்.

அவனியே அண்ணாந்து பார்க்கும் வகையில் கோயில் எழுப்பிய கோமானுக்கு, அந்தக் கோயிலின் வளாகத்தில்கூட இடமில்லை என்பது எத்தனை வேதனையானது?

ராஜராஜனோ, தனக்கு முடிசூட்டு விழா நடைபெறவிருந்த நிலையில், தானே உத்தம சோழனுக்கு முடிசூட்டி, உறுதுணையாய் இருந்து, பல ஆண்டுகள் கழிந்த பின்னரே தான் பதவிக்கு வந்திருக்கிறார் என்றால் ராஜராஜன் அல்லவா உண்மையிலேயே உத்தம சோழன்

ராஜராஜனின் கல்லறை எங்கிருக்கிறது என அறிய முடியாமல் போனதுபோலவே, அந்த மறத் தமிழனின் வீரமும், ஈரமும்கூட இன்று போனஇடம் தெரியவில்லை. "சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி' என்ற பாரதியின் வரிகளுக்கு உதாரணம் கூறுமளவுக்கு அல்லவா தமிழினம் மாறிவிட்டது?

அண்டை நாட்டில் தன் சொந்தங்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டதைக் கண்டிக்காதாது மட்டுமல்ல, அந் நாட்டின் தலைவரை இங்கு வரவழைத்து பல்வேறு வகைகளில் கெüரவப்படுத்தும் செயலுக்கு சிறு எதிர்ப்புக்கூட காட்டாத இன, மொழிப்பற்றை எந்த வகையில் சேர்ப்பது?

சிறந்த நிர்வாகம், பாரபட்சமற்ற அணுகுமுறை, ஒளிவுமறைவற்ற ஆட்சி, கலையுள்ளம், சமயப் பொதுநிலை என எந்த வகையில், எப்படிப் பார்த்தாலும் ராஜராஜனுக்கு நிகர் ராஜராஜனே!

source : Dinamani