|
ஈ.சி.ஆரில் சென்டர் மீடியன் விளக்குகள் தேவை Nov 8, 10 |
|
நீலாங்கரை : கிழக்கு கடற்கரை சாலையில் பாலவாக்கம் முதல் முட்டுக்காடு வரை சென்டர் மீடியன் விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.
சென்னை புறநகரில் அதிக போக்குவரத்து கொண்ட சாலைகளில் ஒன்று கிழக்கு கடற்கரை சாலை. இச்சாலையில் முட்டுக்காடு வரை கேளிக்கை அரங்குகள், முதலைப் பண்ணை, படகு குழாம், தீம் பார்க்குகள் உள்ளன. மாமல்லபுரம் செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் போக்குவரத்தும் இச்சாலையில் அதிகம். மாநகர பஸ்களும், ஷேர் ஆட்டோக்களும் அதிகளவில் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக இரவு, பகல் 24 மணி நேரமும் போக்குவரத்து காணப்படும். இச்சாலையை விரிவாக்கம் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.
ஈ.சி.ஆர்., சாலையை பொறுத்தவரை ஈஞ்சம்பாக்கம் வரை சென்டர் மீடியன் வசதி செய்யப்பட்டிருந்தாலும், சாலை விளக்குகள் அமைக்கப்படவில்லை. திருவான்மியூரில் இருந்து கொட்டிவாக்கம் வரை மட்டுமே சென்டர் மீடியன் விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இச்சாலையில் இரவு நேர வாகன போக்குவரத்து அதிகம். குறிப்பாக முட்டுக்காடு முதல் நீலாங்கரை வரை வாகனங்கள் அசுர வேகத்தில் இயக்கப்படுகின்றன. அங்கு சாலை விளக்கு வசதி இல்லாத காரணத்தால் அதிக விபத்துகள் நடக்கின்றன. எனவே, ஈ.சி.ஆர்., சாலையில், மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரியுள்ளனர்.
source : Dinamalar |
|
|
|
|
|