|
வடபழனியில் சூரசம்ஹாரம்:பக்தர்கள் பரவசம் Nov 11, 10 |
|
சென்னை : வடபழனியில் நேற்று மாலை நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.சென்னை வடபழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டியை ஒட்டி கடந்த ஆறு நாட்களாக லட்சார்ச்சனை நடைபெற்று வந்தது. நேற்று மதியத்துடன் லட்சார்ச்சனை முடிந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டன.இதைத் தொடர்ந்து நேற்று மாலை மீனாட்சி அம்மனிடம், பழனி ஆண்டவர் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. பின், அதிர்வேட்டு முழங்க கோபாவேசத்துடன் முருகப் பெருமான் போர்களத்திற்கு புறப்படும் நிகழ்ச்சி நடந்தது.பின் சன்னிதி தெருவில், நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில், ஆடு, எருது, சிங்கம், மரம் என பல்வேறு வடிவங்கள் எடுத்து வந்த அசுரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. கந்த சஷ்டியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து வடபழனி ஆண்டவரை வழிபட்டனர்.விழாவை ஒட்டி, வடபழனி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறையினரும், அறங்காவலர் குழுவினரும் செய்திருந்தனர். இன்று, வடபழனியில் திருகல்யாண உற்சவம் நடக்கிறது.
Source:Dinamalar |
|
|
|
|
|