Nagaratharonline.com
 
சென்னையில் நீண்ட தூர பஸ் இனி இல்லை  Nov 26, 10
 
சென்னை நகரில் நீண்ட தூர வழித்தட பஸ்கள் இனி இருக்காது; பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை உள்பட பெருநகரங்களில் நீண்ட தொலைவுகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. உதாரணத்துக்கு, சென்னை அண்ணாநகரில் இருந்து கேளம்பாக்கம் வரை ஒரே பஸ் இயக்கப்படுகிறது.

ஆனால், இந்த வழித்தடத்தின் சில நிறுத்தங்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக போக்குவரத்துத் துறை கண்டறிந்துள்ளது. அதேநேரம், நீண்ட தொலைவு பஸ் ஓட்டுவதால் டிரைவர்களுக்கும் அசதி ஏற்படுகிறது. இந்தக் குறையைப் போக்க அரசு

நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐ.ஆர்.டி. ஆய்வு: சென்னையில் நீண்ட தூர வழித்தடங்களில் எத்தனை பஸ்கள் இயக்கப்படுகின்றன? அவற்றின் தொலைவு எவ்வளவு? என்பன போன்ற விவரங்களை ஆய்வு செய்யும் பணியை சாலை போக்குவரத்து நிறுவனம் (ஐ.ஆர்.டி.) மேற்கொண்டு வருகிறது. இதன் அறிக்கை இந்த மாத இறுதியில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

""நீண்ட தூரமுள்ள வழித் தடத்தில் எந்தெந்த பஸ் நிறுத்தங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவு உள்ளதோ அங்கு கூடுதல் பஸ்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், ஐ.ஆர்.டி.யின் அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று போக்குவரத்துத் துறை உயரதிகாரி ஒருவர் கூறினார்.

பெண் பயணிகளின் இடம் மாற்றம்: சென்னை நகர பஸ்களில் இரண்டு வழித்தடங்களில் பெண் பயணிகளின் இருக்கை இடது புறத்தில் இருந்து வலது புறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருப்பதால், மேலும் பல பஸ்களில் இந்த மாற்றத்தைக் கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


source : Dinamani