|
திருச்சி - காரைக்குடி பயணிகள் ரயில் Nov 30, 10 |
|
. திருச்சி- காரைக்குடி இடையே கீரனூர், புதுக்கோட்டை, திருமயம் வழியாக தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் குமாரமங்கலம், கீரனூர், நார்த்தாமலை, வெள்ளனூர், புதுக்கோட்டை, நமணசமுத்திரம், திருமயம், செட்டிநாடு, கோட்டையூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
காரைக்குடியில் இருந்து தினமும் காலை 6.35 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் (வண்டி எண். 830) காலை 9 மணிக்கு திருச்சியை வந்தடையும். எதிர் வழித்தடத்தில் (வண்டி எண். 831) தினமும் மாலை 6.15 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, இரவு 8.35 மணிக்கு காரைக்குடியை சென்றடையும்.
இந்த ரயில் காரைக்குடியில் இருந்து புறப்படும் போது காலை 7.25 மணிக்கும், திருச்சியில் இருந்து காரைக்குடி செல்லும்போது இரவு 7.28 மணிக்கும் புதுக்கோட்டை ரயில் நிலையத்தை அடைகிறது.
திருச்சியில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கும் இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
வேலை நாள்களில் மூன்று பெட்டிகளிலும் கூட்டம் அதிகளவில் காணப்படுவதால், கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாள்களாக பயணிகள் மத்தியில் உள்ளது.
இதே வழித்தடத்தில் காலை நேரத்தில் திருச்சியில் இருந்து காரைக்குடி செல்ல வசதியாக காலை 6.15 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் வகையிலும், காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு வர வசதியாக மாலை 6.30 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்படும் வகையிலும் ராமேசுவரம் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
மூன்று பெட்டிகளுடன் மட்டுமே இயக்கப்பட்டு வரும் திருச்சி- காரைக்குடி பயணிகள் ரயிலில் பயணிகள் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என பயணிகள் தரப்பிலும், சமூக அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
source : Dinamani. |
|
|
|
|
|