|
அமெரிக்க விமான நிலையத்தில் இந்திய தூதர் மீரா சங்கருக்கு அவமரியாதை Dec 10, 10 |
|
வாஷிங்டன், டிச.9: அமெரிக்கா விமான நிலையத்தில் அந்நாட்டுக்கான இந்திய தூதர் மீரா சங்கரை அவமதிக்கும் வகையில் அந்நாட்டு அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
தான் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் என்று கூறிய பின்னும் அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 4-ம் தேதி நடத்துள்ளது.
இது குறித்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதகரம் கூறியுள்ளது:
அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில உள்ள மிசிசிபி பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வதற்காக மீரா சங்கர் சென்றார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் பால்டிமோர் செல்வதற்காக மிசிசிபியில் உள்ள ஜாக்சன்-எவர்ஸ் விமான நிலையத்துக்கு அவர் வந்தார். அப்போது அவர் சேலை அணிந்து சென்றிருந்தார்.
அங்கு விமானத்துக்காக காத்திருந்தபோது, அவரிடம் சோதனை நடத்த வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அப்போது அவர் இந்திய தூதர் என்று கூறியதையும் விமான நிலைய அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை. கண்டிப்பாக சோதனையிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனையடுத்து மீரா சங்கரை விஐபிக்கள் ஓய்வு அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சந்தேகத்துக்கு இடமான பொருள் எதையும் வைத்துள்ளாரா என்று பெண் அதிகாரிகள், கைகளால் தடவி சோதனையிட்டனர். இதன் பின்னரே அவரை விமானத்தில் செல்ல அனுமதித்துள்ளனர்.
அமெரிக்காவுக்கான இந்திய தூதர் என்று கூறிய பின்னரும் அவரை அவமதிக்கும் வகையில் விமான நிலைய அதிகாரிகள் நடந்துகொண்டுள்ளனர்.
இது தொடர்பாக அமெரிக்க அரசிடம் இந்திய தூதரம் சார்பில் புகார் கூறப்பட்டுள்ளது என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மிசிசிபியில் உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் ஜாக்சன்-எவர்ஸ் விமான நிலையத்தில் பயணிகளை ஸ்கேன் செய்யும் நவீன இயந்திரம் இல்லை. இது தவிர மீரா சங்கர், சேலை அணிந்திருந்ததால், இதுபோன்ற சோதனைக்கு கட்டயமாக உள்படுத்தப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா கண்டனம்: மீரா சங்கருக்கு நிகழ்ந்த அவமதிப்புக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியது: மீரா சங்கரை அமெரிக்க அதிகாரிகள் சோதனையிட்டதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
இது தொடர்பாக அமெரிக்க அரசிடம் புகார் தெரிவிக்கப்படும். கடந்த 3 மாதத்தில் இரண்டாவது முறையாக இந்திய அதிகாரிகளை அவமதிக்கும் சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது என்றார் அவர்.
இந்திய அதிகாரிகள் மட்டுமின்றி இந்திய அரசியல் தலைவர்களும் அமெரிக்க அதிகாரிகளால் இதுபோன்ற அவமரியாதையைச் சந்தித்துள்ளனர்.
source : Dinamani |
|
|
|
|
|