Nagaratharonline.com
 
பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு இடையூறாக உள்ள தடைகள்  Jan 3, 11
 
பழனி, ஜன. 2: பழனியில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன.

ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்குவது பழனி. பழனியில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் ஆகியவை இருபெரும் விழாக்களாகும்.

இதில் தைப்பூச விழா முக்கியமானது. தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவையொட்டி, லட்சக்கணக்கில் பக்தர்கள் பழனிக்கு வருவது வழக்கம்.

இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல நூறு கிலோ மீட்டர்கள் பாத யாத்திரையாக நடந்து பல ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர்.

வழிநெடுக தனியார் பலரும் அன்னதானம், நீர் மோர், குடிநீர் ஆகியவற்றை பக்தர்களுக்கு வழங்குகின்றனர்.

இதைத் தவிர, வேறு எந்தத் துறையினரும் அடிப்படை வசதிகளை சரிவர மேற்கொள்வதில்லை என்பது பக்தர்களின் புகாராகும்.

பழனியில் ஜனவரி 5-ம் தேதி, மாவட்ட ஆட்சியர் வள்ளலார் தலைமையில் நடைபெறும் கருத்தரங்கில், கீழ்க்கண்ட பிரச்னைகளுக்குத் தீர்வுகாணப்பட வேண்டும் என்பதே முருக பக்தர்களின் கோரிக்கையாகும்.

நெடுஞ்சாலைத் துறை:

பழனியை நோக்கி, பாதயாத்திரை பக்தர்கள் வரும் பாதை மிகவும் மோசமாக உள்ளது என்பது இவற்றில் முக்கியமான புகாராகும்.

பக்தர்கள் செல்லும் வழியில் வேகமாகச் செல்லும் வாகனங்களும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்குகின்றன.

பக்தர்களுக்கு ரூ. 4 கோடி செலவில் போடப்பட்ட தனிப்பாதை, தற்போது இருந்த சுவடு இல்லாமல் போய்விட்டது.

இந்தச் சாலையை அமைத்தபோதே, பக்தர்களுக்கு தனியாகத் தெரியும் வண்ணம் பாதை அமைக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர். ஆனால், அக்கோரிக்கை ஏற்கப்படவில்லை.

பல நூறு கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வரும் நடந்தே வரும் பக்தர்கள் ஒட்டன்சத்திரம் வரும்போது, சிறிய கல் தட்டினாலே உயிர் போகும் அளவுக்கு மிகுந்த வலி ஏற்படும். ஆனால், தற்போது சாலை வழி நெடுக கற்களே பாதையாக உள்ளதாக பக்தர்கள் வேதனைப்படுகின்றனர். இதில் விரதமிருந்து சிறு குழந்தைகளை அழைத்துவருவோர் படும்பாடு வருந்தத்தக்கது.

மோட்டார் வாகன அலுவலகம்:

அடுத்ததாக வாகனங்களின் அசுரவேகம், காதைப் பிளக்கும் ஒலி.

விழாக்காலம் துவங்கியவுடன், பஸ்களில் முன்னே பக்தர்கள், கவனம் தேவை எனப் பிரசுரம் ஒட்டப்பட்டாலும், அதை யாரும் கண்டுகொள்வது இல்லை. அதிகாலையில் நடக்கும் பக்தர்களுக்கு எதிரே வரும் வாகனத்தில் அதிக ஒளி வெள்ளம், காதைப் பிளக்கும் ஒலி விபத்தை ஏற்படுத்தும் காரணிகளாக உள்ளன.

பொதுப்பணித்துறை: பழனிக்கு வரும் பக்தர்கள், பழனியின் புனித தீர்த்தங்களாக சண்முக நதி, இடும்பன் குளத்தில் நீராடுகின்றனர். இவையிரண்டும் பொதுப்பணித் துறை பொறுப்பில் உள்ளன. இங்கு பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததால், வருடம்தோறும் இதில் நீராடும் பக்தர்களில் அசம்பாவிதமாகச் சிலர் உயிரிழப்பது தவிர்க்க இயலாததாக உள்ளது.

ஆகவே, இவற்றில் நீண்ட படித்துறை அமைத்தும், நீராடும் பெண்களுக்கு உடை மாற்ற தனி இடம் அமைத்துத்தருதல் அவசியமாகும்.

காவல்துறை:

பழனியில் தைப்பூசத் திருவிழா, பொங்கல் பண்டிகையை ஒட்டி வருவதால், அதிக அளவு கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்புக்காக கூடுதல் போலீஸôர் நியமிக்கப்பட்டாலும், பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டு, ஏராளமான பக்தர்கள் உடைமைகளை இழக்கும் நிலை ஏற்படுவதாகப் புகார் தெரிவிக்கின்றனர்.

போக்குவரத்தைச் சீரமைத்து, விபத்தைக் குறைக்க போலீஸôர் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது இல்லை என்றும் கூறப்படுகிறது.

நகராட்சி நிர்வாகம்:

பழனி தைப்பூசத் திருவிழாவின்போது, நகராட்சிக்கு துப்புரவு பணிக்கு திருக்கோயில் நிர்வாகம் கூடுதல் நிதி வழங்கி வருகிறது. எனினும் , பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதால் நகரில் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

அடிவாரம் பகுதியில் உள்ள கடைகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் இருந்து வீசப்படும் கழிவுகள் சாலையில் கிடப்பதால் பக்தர்கள் முகம் சுழிக்கின்றனர்.

கழிவுகளை வீசினால் அபராதம் விதிக்கப்படும் என பலமுறை அறிவித்தாலும், இதுவரை விதிக்கப்படாததால், கடைக்காரர்களும் கண்டுகொள்வது இல்லை.

சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள், தொற்றுநோயைப் பரப்பும் பன்றிகள், தெரு நாய்களுக்கு நகரில் எந்தத் தடையும் இல்லாத நிலையே நீடிக்கிறது.

திருக்கோயில் நிர்வாகம்:

பழனிக்கு வரும் முருக பக்தர்கள் வழங்கும் காணிக்கை ஆண்டுதோறும் பல கோடி ரூபாய்களைத் தாண்டிவரும் நிலையில், பக்தர்களுக்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் செய்துள்ள வசதிகள் மிகவும் குறைவாக உள்ளது.

மலைக்கோயிலில் பக்தர்கள் கழிப்பிட வசதியின்றி பெரும் அல்லலுக்கு ஆளாகிவருகின்றனர். மலைக்கோயிலில் உள்ள கழிப்பிடங்கள் டைல்ஸ் உடைந்து, போதிய பராமரிப்பின்றி சுகாதாரக் கேடுடன் நோயைப் பரப்புவதாக உள்ளது.

அடிவாரம் பகுதியிலும் பக்தர்களுக்கு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட மொபைல் கழிப்பறை வாகனம் பராமரிப்பின்றி உள்ளது.

மலைக்கோயிலில் பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து வரும் வழியில் உள்ள பஞ்சாமிர்த கடைகளை அகற்றி, பக்தர்கள் உடனடியாக வெளியேற வாய்ப்பு ஏற்படுத்துவது, நெரிசலால் விபத்து நேர்வதை தவிர்க்கும்.

மலைக்கோயிலில் பக்தர்களுக்கு நிரந்தரமாக மருத்துவ வசதி தேவை. மருத்துவர் நியமிக்கப்படாததால், மலைக்கு வரும் பக்தர்கள் இருதய நோய்களால் உயிரிழப்பது அடிக்கடி நடந்து வருகிறது.

பழனியில் நகராட்சி, திருக்கோயில் நிர்வாகம் சேர்ந்து பாரபட்சமின்றி ஆக்கிரமிப்பை முற்றிலும் அகற்றுதல் அவசியம்.

ஒவ்வொரு முறையும் நடைபெறும் கூட்டங்களில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக குறைபாடுகளைக் களைகிறோம் எனத் தெரிவிக்கின்றனரே தவிர செய்வது இல்லை. இதைக் கண்காணிக்க தனி அதிகாரி நியமித்தல் அவசியம் என்பதே பலரது கருத்தாக உள்ளது.


source : Dinamani