|
NEWS REPORT: அஞ்சனா தேவியும், ஆஞ்சநேயனும்! Jan 3, 11 |
|
தேவலோகத்தில், ‘புனஜிகஸ்தாரை’ என்கிற பெயருடைய அப்சரஸ் கன்னிகை இருந்து வந்தாள்.
ஒருநாள் அவள், கந்தர்வப் புருஷன் ஒருவனோடு ஜலக்கிரீடையில் ஈடுபட்டிருந்தாள். அவ்வழியே வந்த முனிவர் ஒருவர், அவளின் இழிச்செயலைக் கண்டு, பூலோகத்தில் வானரமாகப் போகக்கடவது" என்று சாபத்தைக் கொடுத்து விட்டார்.
தன் செயலுக்காக மிகவும் வருந்திய அக்கன்னிகை, தன்னுடைய சாபத்தை விலக்கிக் கொள்ளும் மார்கத்தையும் அம்முனிவரிடமே கேட்டாள்.
அதற்கு அம்முனிவர், உண்மையான பக்தியோடு சிவபெருமானைக் குறித்துத் தவமிருந்தால், அவரது அனுக்கிரகத்தால் உனக்கு புத்திரன் ஒருவன் பிறப்பான்; அவனது பிறப்பால்தான் உன்னுடைய சாபம் நிவர்த்தி அடையும்" என்று உபாயத்தைக் கூறினார்.
புனஜிகஸ்தாரை ஆனவள் பூலோகத்தில் அஞ்சனை என்கிற பெயரில் வானரப் பெண்ணாகத் தோன்றினாள்.
கேசரி என்னும் பெயருடைய வானரத் தலைவனை மணந்து கொண்டாள். அஞ்சனைக்கு கிடைக்கப் பெற்ற சாபத்தைப் போக்குவதற்கு, கேசரி உதவுவதாக உறுதியளித்தான். இருவரும் அம்மகேசனைக் குறித்துத் தவம் இருக்க, கானகத்தில் தகுந்த ஒரு இடத்தைத் தேர்வு செய்தனர். இருவருமாக அமர்ந்து இரவு பகலாக சர்வேஸ்வரனைத் துதிக்கலானார்கள்.
அவர்களது பக்தியை மெச்சிய ஈசன், அவர்களின் முன்தோன்றி, தானே அவர்களுக்கு புத்திரனாக அவதாரம் செய்வதாகக் கூறினார்.
ஈசனின் வேண்டுகோளின்படி வாயு பகவான் ஆனவர், சிவபெருமானின் அம்சமாக சக்தியை, அஞ்சனையிடம் சேர்ப்பித்தார். சிவபெருமானின் அம்சமாகப் பிறந்த ஆஞ்சநேயனுக்கு ‘மகா ருத்ரன்’ என்றொரு பெயரும் உண்டு. வாயு பகவானால் அஞ்சனையின் கர்ப்பத்தில் சேர்க்கப்பட்டவன் ஆதலால் வாயு புத்திரன் என்று அழைக்கப்படுகிறார்.
இவ்வாறு தவமாய்த் தவமிருந்து பெற்று வளர்த்த மகனைத் தொட்டிலில் இட்டு விட்டு அகன்றிருந்தாள், அஞ்சனை. அப்பொழுது வானவெளியில் ஜொலிப்புடன் தோன்றிய சூரியனைத் தாவிப் பிடிப்பதற்காக வாயுதேவனின் புத்திரனான ஆஞ்சநேயர், வேகமாகத் தாவி முன்னேறினார்.
அன்று அமாவாசை தினமாக இருந்ததால், சூரியனைக் கவர ராகு சூரியமண்டலத்திற்கு விரைந்து கொண்டிருந்தார். ஆஞ்சநேயர் வேகமாகப் பாய்ந்துச் செல்வதைக் கண்ட ராகுவானவர், இந்திரனிடம் முறையிட, இந்திரன் தன் வஜ்ராயுதத்தை அனுமானின் மீது வீசினார்.
வீசிய ஆயுதம் அவரது தாடையைத் தாக்க, அனுமான் மூர்ச்சையாகி கீழே பூமியில் விழுந்தார்.
அஞ்சனை, தன் புத்திரனின் நிலை கண்டு, இறந்து விட்டதாகவே எண்ணி வருந்தத் தொடங்க, வாயு பகவானும் தன் மகனுக்கு ஏற்பட்ட நிலையைக் கண்டு ஸ்தம்பித்து நின்றார். வாயுதேவன் ஸ்தம்பித்ததால் பூலோகமே அசைவற்று நின்றது.
தேவேந்திரன் தன் செயலைப் பிரும்ம தேவனிடம் முறையிட்டார். பிரும்மா, விஷ்ணு, சிவன் மூவருமே அவ்விடத்திற்கு விரைந்தனர். அனுமான் மூர்ச்சையாகித்தான் விழுந்திருப்பதாகக் கூறிய பிரும்மதேவர், மேலும் சில வரங்களையும் அனுமானுக்கு அருளினார்.
அதாவது அனுமனுக்கு மரணம் என்பதே கிடையாது. என்றென்றும் சிரஞ்சீவியாக இருப்பார். எந்தவித ஆயுதத்தாலும் அனுமானுக்கு தீங்கு ஏற்படாது. ஸ்ரீராமர் மெச்சும் பக்தனாக பரிமளிப்பார் என்று கூறினார்.
அவரது கூற்றினை ஸ்ரீ மகாவிஷ்ணுவும் ஸ்ரீ சிவபெருமானும் ஆமோதித்த பிறகே வாயுதேவன், லோக சஞ்சாரத்திற்குக் கிளம்பியதாகப் புராணங்கள் சொல்கின்றன.
உத்தர்கண்ட் மாநிலம், ஹரித்துவாரில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளளது ‘நீல பர்வதம்’ என்னும் மலைப் பிரதேசம். இமாலய மலைத் தொடரில், சிவாலிக் குன்றுகளில் அமைந்திருக்கும் இந்தப் புண்ணிய கேஷத்திரத்தில் ஸ்ரீ அஞ்சனாதேவிக்கென்று பிரத்யேகக் கோயில் அமைந்துள்ளது.
மலையடிவாரத்தில் இருந்து கோயில் வரை கேபிள் கார் வசதி உள்ளது. நடந்து சென்றும் தரிசிக்கலாம். இக் கோயிலில் சிவலிங்கமும் உண்டு.
ஸ்ரீராம தூதனான அனுமனையும், அவரை ஈன்ற அஞ்சனா தேவியையும் இந்நன்னாளில் வழிபட்டு வளங்கள் யாவும் பெறுவோம்.
source : Mangaiyar malar |
|
|
|
|
|