Nagaratharonline.com
 
திருக்கோஷ்டியூர் திருக்கல்யாணம் : 43 ஆண்டுக்கு பின் துவக்கம்  Jan 17, 11
 
திருக்கோஷ்டியூர் சவும்ய நாராயண பெருமாள் கோயிலில், 43 ஆண்டுகளுக்கு பின் நேற்று, திருக்கல்யாண உற்சவம் துவங்கியது. வைணவ தலங்கள் 108 ல், திருக்கோஷ்டியூர், ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டும் ஆண்டாள், பெருமாள் திருக்கல்யாணம் நடக்கும்.

ஆண்டாள் பிறந்த தலம் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூரிலும், ஆண்டாளுக்காக பெருமாள் கிருஷ்ணராக அவதரித்து கிருஷ்ண லீலை புரிந்த தலம் என்பதால் திருக்கோஷ்டியூரிலும் இந்நடைமுறை உள்ளது. இங்கு நிர்வாக காரணங்களால், 43 ஆண்டுகளாக உற்சவம் நடக்கவில்லை.

மீண்டும், இந்த உற்சவம் நேற்று துவங்கியது. மாலை 5 மணிக்கு ஆண்டாள் சயன பெருமாள் சன்னதியில் எழுந்தருளினார். ஆண்டாளுக்கு அபிஷேகங்கள் நடந்தன. பெரிய பெருமாளிடம் பிரியாவிடை பெற்று திருக்கதவுகள் பூட்டப்பட்டன. சுவாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டது. பக்தர்களுக்கு திருப்பாவை விளக்கவுரை அளிக்கப்பட்டது. இன்று காலை ஆண்டாள் தைலக்காப்பு மண்டபம் எழுந்தருள்வார். திருவீதி சுற்றுதலுக்கு பின், திருமேனிகளுக்கு தைலம் சார்த்துதல் நடக்கும். மாலையில் ஆண்டாளுக்கு நவகலச அலங்காரத்துடன் சிறப்பு அபிஷேகம், இரவில் திருவீதி உலா நடக்கிறது. வரும் 21 ம் தேதி மாலை, மாலை மாற்றி ஊஞ்சலில் திருக்கல்யாணம் நடக்கும்.

source : Dinamalar