Nagaratharonline.com
 
வெளிநாட்டு பயணிகளை ஈர்ப்பதில் முதலிடம்: உள்நாட்டவரை ஈர்ப்பதில் 3வது இடம்.. தமிழகம் சாதனை  Jan 24, 11
 
பணகுடி: வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என அமைச்சர் சுரேஷ்ராஜன் தெரிவித்தார்.

பணகுடி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் குத்ரபாஞ்சன் அருவியும், கன்னிமாரா ஓடையும் உள்ளன. குத்ரபாஞ்சன் அருவியில் குற்றால சீசன் போதும், மலைக் காலங்களிலும் தண்ணீர் கொட்டும். சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்தவர்கள் இங்கு வந்து குளித்து மகிழ்வர். ஆனால் அருவிக்கு செல்ல சரியான சாலை வசதி இல்லை.

தமிழக அரசு குத்ரபாஞ்சன் அருவி, மற்றும் கன்னி்மாரா ஓடைப் பகுதிகளை மேம்படுத்தி சுற்றுலா தலமாக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இதற்கான திட்டப்பணிகள் துவக்க விழா பணகுடியில் நடந்தது. இந்த விழாவிற்கு கலெக்டர் ஜெயராமன் தலைமை வகித்தார். அப்பாவு எம்எல்ஏ முன்னிலை வகித்தார். பணகுடி பேரூராட்சி தலைவர் டயானா வரவேற்றார்.

அமைச்சர் சுரேஷ் ராஜன் அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை துவக்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், "அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுலா வளர்ச்சி திட்டப்பணிகளை முதல்வர் கருணாநிதி சிறப்பாக செய்து வருகிறார். இதன் மூலம் கடந்த நான்கரை ஆண்டு காலமாக தமிழகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்திற்கு ஆண்டுதோறும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் 15 கோடி பேரும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 25 லட்சம் பேரும் வருகின்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்ப்பதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. உள்நாட்டு பயணிகளை ஈர்ப்பதில் 3வது இடம் வகிக்கிறது.

இதனால் உள்நாட்டு பயணிகளை அதிகளவில் சுற்றுலா தலங்களுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து பணிகளையும் முதல்வர் கருணாநிதி செய்து வருகிறார்," என்றார்.

Source:Thatstamil