|
தடையை மீறி காரைக்குடியில் "பாலித்தீன்' பைகள் புழக்கம் Jan 25, 11 |
|
காரைக்குடி : காரைக்குடியில் பாலித்தீன் பைகளுக்கு நகராட்சி தடைவிதித்தபோதும், கடைகளில் தயக்கமின்றி பயன்படுத்துவதால், சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை உள்ளது. எளிதில் மக்கா தன்மை கொண்ட பாலித்தீன், பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் பூமியில் தங்குவதால், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கும். குப்பைகளில் கிடக்கும் பைகளை கால்நடைகள் சாப்பிடுவதால், உயிருக்கு ஆபத்து ஏற்படும். தடை உத்தரவு: இதை தவிர்க்க, நகரில் ஓட்டல், டீக்கடைகளில் பாலித்தீன், பிளாஸ்டிக் பை உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த நகராட்சி நிர்வாகம் அக்.,1 முதல் தடை விதித்தது. இதைமீறி பயன்படுத்தினால், கடைக்காரர்கள், உபயோகிப்பாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தது. இது குறித்து அனைத்து தரப்பினருக்கும் தகவல் தரப்பட்டது.. தடையை மீறி பயன்படுத்தினால், 100 முதல் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்க நகராட்சி உத்தரவிட்டது. கிடப்பில்: நகராட்சியின் இந்த உத்தரவு, இங்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது, தடையை மீறி கடைகளில் இது போன்ற பைகள் விற்கப்படுகின்றன. டீக்கடைகளில் பிளாஸ்டிக் கப், பேக்கரிகளில் பாலித்தீன் பைகளில் உணவு பொருட்களை வழங்குகின்றனர். இதை கண்காணிக்கவேண்டிய நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. கேள்விக்குறி: எனவே பாரம்பரிய சுற்றுலா நகரமாக விளங்கும் இந்நகரில், மீண்டும் பாலித்தீன், பிளாஸ்டிக் கப் புழக்கம் அதிகரித்துள்ளதால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், கோயிலை சுற்றிப்பார்க்கவரும் ஆன்மிகவாதிகள் முகம் சுழிக்கின்றனர். நகராட்சி நிர்வாகம் தடை உத்தரவை தொடர்ந்து பின்பற்றி, நகரின் சுகாதாரம் காக்கவேண்டும். நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் கூறுகையில்,"" தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகள் விற்கும் கடைகளில் திடீர் "ரைடு' நடத்தப்படும். பாலித்தீன் பை, பிளாஸ்டிக் கப்கள் இருப்பது தெரிந்தால், அக்கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்
Source:Dinamalar |
|
|
|
|
|