|
கோயம்பேட்டில் தரம், சுவை, நிறத்துடன் மூன்று ரூபாய்க்கு "டீ' Jan 30, 11 |
|
கோயம்பேடு பஸ் நிலையத்தில் மத்திய அரசு நிறுவனம் 3 ரூபாய்க்கு தரமான "டீ' யை விற்பனை செய்கிறது. .
கோயம்பேடு, பாரிமுனை பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஒரு கப் "டீ' 7 ரூபாய், காபி 8 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மற்ற கடைகளில் குறைந்தபட்சம் ஒரு கப் "டீ' 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலை கொடுத்து வாங்கினாலும்,"டீ'யின் தரம், சுவை, நிறத்துடன் இருப்பதில்லை. பல கடைகளில், வர்த்தக நோக்குடன் புளியங்கொட்டை, மரத்தூள் மூலம் தயாரிக்கப்பட்டு குறைந்த விலையில் விற்கப்படும் "டீ' தூள்களையே பயன்படுத்துகின்றனர். இந்த "டீ' குடிப்பவர்களுக்கு வயிற்று உபாதை ஏற்படுகிறது.
இதற்கெல்லாம் விதிவிலக்காக, சென்னையில் ஒரு இடத்தில்மட்டும் 2004ம் ஆண்டு முதல் 3 ரூபாய்க்கு கிடைக்கிறது. உண்மைதான். சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தினுள் மத்திய அரசின் தொழிற்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள "டீ போர்ட்' அலுவலக கடை உள்ளது. இங்கு 3 ரூபாய்க்கு தரமான "டீ' விற்கப்படுகிறது. 4 ரூபாய்க்கு"லெமன் டீ' விற்கப்படுகிறது. வால்பாறை தோட்டத்தில் இருந்து தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் "டீ' தூள் இங்கு பயன்படுத்தப்படுகிறது.
இங்கு பணிபுரியும் ஊழியர்கள் கூறியதாவது: காலை 5.30 மணிமுதல் இரவு 7.30 மணிவரை கடை இயங்குகிறது. நாங்கள் கொடுக்கும் "டீ' தரமாக இருப்பதால், பலர் எங்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். சில கடைகளில் "லெமன்' டீயில், எலுமிச்சை சாறுக்கு பதிலாக, கெமிக்கல் தூளை பயன்படுத்துகின்றனர். நாங்கள் எலுமிச்சை பழங்கள் மூலம் டீ தயாரித்து கொடுக்கிறோம். பாலிலும் தண்ணீர் கலப்பதில்லை. தினமும் சராசரியாக 1,500 பேர் இங்கு "டீ' குடிக்கின்றனர். ஒரு தடவை போட்ட "டீ'யை மீண்டும் சூடாக்கி குடித்தால் "புட் பாய்சன்' ஆக வாய்ப்புள்ளது. எனவே, நாங்கள் உடனுக்குடன் மட்டுமே "டீ' தயாரித்து கொடுக்கிறோம். ஒரு முறை பயன்படுத்தும் "டீ' தூளை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே டீ தயாரிக்க பயன்படுத்துகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
"டீ' பிரியர்கள் ஆர்வம்: இக்கடைக்கு வருபவர்கள், டீ குடித்து முடித்தவுடன் "டீ' தூள் இங்கு கிடைக்குமா என கேட்கின்றனர். ஆனால், அங்கு டீ தூள் விற்கப்படுவதில்லை. இக்கடையை, சென்னை நகரில் பல இடங்களிலும் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு டீ பிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
source : Dinamlar |
|
|
|
|
|