Nagaratharonline.com
 
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மீண்டும் வாய்ப்பு  Feb 1, 11
 
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: வாக்காளர் பட்டியல்களில் பெயர் சேர்க்க விரும்பும் தகுதியுள்ள நபர்கள் தங்கள் வசிப்பிட முகவரிக்கான சான்றுடன் படிவம் 6-ல் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 24 வயதுடையவர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் வயதுக்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்கள் (அதாவது வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சிகள்) அல்லது வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களிலோ (மாநகராட்சிப் பகுதிகளில் மண்டல அலுவலகங்கள், மற்ற பகுதிகளில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள்) சமர்ப்பிக்கலாம். வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள தலைமையிடத் துணை வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள தலைமை உதவியாளர், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் உள்ள அலுவலக மேலாளர் ஆகியோர் இந்த தொடர் திருத்தத்தில் விண்ணப்பங்களைப் பெற நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் விண்ணப்பங்களை அளிக்கலாம்.

விண்ணப்பத்தைப் பெற்றதற்கு ஒப்புகை அளிப்பதோடு விண்ணப்பத்தின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறியவும், தகுதி இருப்பின் புகைப்பட அடையாள அட்டையைப் பெறவும் விண்ணப்பதாரர் எந்த நாளில் வர வேண்டும் என்பதையும் அவர் தெரிவிப்பார்.

விண்ணப்பங்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டோருக்கு ஒரு மாத காலத்தில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும்


source : Dinamani