|
பெற்றோர்களின் ஆசையை பூர்த்தி செய்வதே செட்டிநாடு பள்ளியின் நோக்கம் Feb 3, 11 |
|
காரைக்குடி, பிப். 2: தங்களது குழந்தைகள் எதிர்காலத்தில் எத்தகைய உயர்நிலையை அடைய வேண்டும் என்ற பெற்றோர்களின் ஆசையைப் பூர்த்தி செய்வதே செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் நோக்கமாகும் என்று அப் பள்ளியின் தலைவரான குமரேசன் தெரிவித்தார்.
செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் வரும் ஆண்டுக்கான சேர்க்கைக்குரிய விண்ணப்பம் வழங்கும் பணி புதன்கிழமை (பிப்.2) முதல் தொடங்கியது. அப்போது, இப் பள்ளி மானகிரி அருகே கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது என்றும் குமரேசன் தெரிவித்தார்.
பள்ளியின் செயல்பாடுகள் குறித்து அவர் மேலும் கூறியது: குழந்தைகளின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து அவர்களை முழுமை பெற்றவர்களாக உருவாக்கி வருகிறோம். இங்கு படித்துமுடித்து வெளியேறும்போது அந்த மாணவர் தலைமைப் பண்புள்ளவராக இருக்க வேண்டும். இப் பள்ளியில் பயிலும் மாணவரை பெற்றோர் வழிநடத்துவதற்குப் பதிலாக எங்கள் மாணவர் பெற்றோரை வழிநடத்தும் வகையில் அனைத்தும் கற்றுத் தருகிறோம். பள்ளியில் மாணவ, மாணவியரின் தனித்தன்மையை அறிகிறோம்.
இப் பள்ளியில் கல்வி, விளையாட்டு, இசை, கணினிப் பயிற்சி என அனைத்தும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. மாணவர்கள் புத்தகப் பையை சுமக்க வைக்கக் கூடாது என்றே வகுப்பறையிலே அவர்களுக்கு தனித்தனி அலமாரிகள் வைத்திருக்கிறோம்.
கணினிப் பயிற்சிக்கு நவீன முறையில் தனியாக பயிற்சி அறையும், பிரமாண்டமான நூலகமும் பள்ளியில் அமைத்துள்ளோம். நூலகத்துக்கு தற்போது உள்ள நூல்களோடு மேலும் 1 ல்ட்சம் நூல்கள் சேர்க்கப்படும். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் தர பெற்றோர்களிடம் தெரிவிக்கிறோம். வரும் ஆண்டில் மாணவர்கள் தங்கிப் பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 150 மாணவர்கள் வரை சேர்க்கப்படுவர் என்றார்.
இப் பேட்டியின்போது பள்ளி இயக்குர்கள் டாக்டர் சோமசுந்தரம், என்.என்.எல். நாச்சியப்பன், வைரவன், பள்ளி முதல்வர் மீனாகுமாரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Source:Dinamani |
|
|
|
|
|