Nagaratharonline.com
 
திருத்தணி முருகன் கோயில் தங்க விமான கும்பாபிஷேகம்  Feb 8, 11
 
திருவள்ளூர் : திருத்தணி முருகன் கோயிலில் நிறுவப்பட்டுள்ள தங்க விமானத்துக்கு நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் முருகனை வழிபட்டனர். ஹெலிகாப்டர் மூலம் கோயில் மீது மலர்கள் தூவப்பட்டன. அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தங்க விமானம் நிர்மானிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் உத்தரவுப்படி, ரூ.25 கோடி செலவில் தங்க விமானம் அமைக்கப்பட்டது.

கடந்த 3ம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. முருகனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. 5, 6 தேதிகளில் சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று காலை 9.30 மணிக்கு அறநிலையத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கொடியசைத்து கும்பாபிஷேகத்தை தொடங்கி வைத்தார். பின்னர், ரிஷி கோபுரம், மூலவர் தங்க விமானம் மற்ற விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டன.

சிவாச்சாரியார்கள், வேத விற்பன்னர்கள், கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அப்போது, ஹெலிகாப்டர் மூலம் தங்க விமானம் மீதும் கோயிலை சுற்றியும் மலர் தூவப்பட்டது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பக்தர்கள் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, 10 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. இரவு 8 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 9 மணிக்கு கேடய உற்சவமும் நடந்தது.

விழாவில், மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், இ.ஏ.பி.சிவாஜி எம்எல்ஏ, அறநிலையத்துறை ஆணையர் ப.ரா.சம்பத், முன்னாள் ஆணையர் பிச்சாண்டி, முன்னாள் எம்பி ஆ.கிருஷ்ணசாமி, கலெக்டர் ராஜேஷ், அறங்காவலர் குழு தலைவர் மு.ஈஸ்வரப்பன், எஸ்பி வனிதா, காந்தி எம்எல்ஏ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Source:Dinakaran