|
பிப். 13 காரைக்குடியில் கவியரசர் கண்ணதாசன் விழா Feb 11, 11 |
|
காரைக்குடி, பிப். 10: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கவியரசர் கண்ணதாசன் சமூக நல அறக்கட்டளை சார்பில் 22-ஆம் ஆண்டு கவியரசர் கண்ணதாசன் விழா
ஞாயிற்றுக்கிழமை (பிப். 13) கண்ணதாசன் மணி மண்டபத்தில் நடைபெறுகிறது.
இதுகுறித்து அறக்கட்டளைப் பொதுச் செயலர் கவிஞர் அரு. நாகப்பன் கூறியது:
காலை 8 மணிக்கு பெண்களுக்கு கோலப் போட்டி மற்றும் தாலாட்டுப் போட்டியுடன் விழா தொடங்குகிறது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏஆர். லெட்சுமணன் தலைமை வகிக்கிறார்.
அறக்கட்டளைத் தலைவர் வீ.ரவி வீரப்பன் வரவேற்புரையாற்றுகிறார். மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோயில் முன்னாள் தக்கார் வி.என்.சிதம்பரம் தொடக்க உரையாற்றுகிறார். அறங்காவலர் குழுத் தலைவர் கருமுத்து தி.கண்ணன், கவியரசர் கண்ணதாசனின் உருவப்படத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
விழாவில், திரைப்பட நடிகை மனோரமா, காரைக்குடி இந்து மதாபிமான சங்கத் தலைவர் சத்தி. திருநாவுக்கரசு ஆகியோர் பேசுகின்றனர். அதைத் தொடர்ந்து கண்ணதாசன் புகழ் காவலர் விருது வழங்கும் நிகழ்ச்சியும், பொதிகை தொலைக்காட்சி நிலையத் துணை இயக்குநர் பாலரமணியை நடுவராகக் கொண்ட சிறப்புப் பட்டிமன்றமும் நடைபெறுகின்றன.
மாலை 6 மணிக்கு அறக்கட்டளைத் தலைவர் வீ. ரவிவீரப்பன் தலைமையில் கருத்தரங்கம் தொடங்குகிறது. கவிஞர் செல்லக்கணபதி வரவேற்றுப் பேசுகிறார்.
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆசியுரை வழங்குகிறார்.
கவியரசரின் மைந்தர்கள் கண்மணி சுப்பு, அண்ணாதுரை கண்ணதாசன்,
ஆண்டாள் பிரியதர்ஷினி, கவிஞர்கள் கா.நாகப்பன், ராமசாமி, தொழிலதிபர் பிஎல். படிக்காசு, சுப. துரைராஜ் ஆகியோர் பேசுகின்றனர். பாரதி போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படுகின்றன
Source:Dinamani |
|
|
|
|
|