Nagaratharonline.com
 
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு  Mar 11, 11
 
இந்தியாவில் வசிப்பிடங்களைக் கொண்ட தற்போது வெளிநாடுகளில் வாழும் இந்தியக் குடிமகன், குடிமகள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரைச் சேர்த்துக் கொண்டு, தேர்தலில் வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான ஆ. சுகந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

1950-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 20-ஏ உடன், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 2010-ன்படி, 11.2.2011 முதல் வெளிநாடுகளில் வாழும் இந்தியக் குடிமக்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

வேலை, படிப்பு, பிற காரணங்களுக்காக சொந்த ஊரை விட்டு வெளிநாடுகளில் வசிப்பவர்களில், அந்த நாட்டுக் குடியுரிமை பெறாதவர்கள் தங்கள் பெயர்களை தங்களது தொகுதிக்குள்பட்ட வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளமுடியும்.

எனவே, 1.1.2011-ல் 18 வயது நிறைவடைந்தவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ள விரும்பினால், அவர்கள் அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு இதற்காக நிர்ணயிக்கப்பட்ட 6-ஏ படிவத்தை நிறைவு செய்து, அதில் தகுதியான இந்திய தூதரக அதிகாரியால் சான்றொப்பம் பெற்று, புகைப்படத்துடன் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

source : Dinamani