|
நாச்சியார்கோவிலில் இன்று இரவு "கருடசேவை' Mar 13, 11 |
|
கும்பகோணம்: நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற கல்கருடசேவை இன்று (14ம் தேதி) நடக்கிறது. கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் வஞ்சுளவல்லி தாயார் உடனாய சீனிவாசபெருமாள் கோவில் உள்ளது. இத்தலத்தில் கருடபகவான் மூலவராகவும், உற்சவராகவும் விளங்குவது சிறப்பு. ஆழ்வார்களால் பாடல் பெற்ற இத்தலத்தில் மணிமுக்தா நதி தீரத்தில் மாதவம் புரிந்த மேதாவி மகரிஷியின் பிரார்தனையை நிறைவேற்ற அவருக்கு குமாரியாய் அவதரித்த வஞ்சுளவல்லியை மானிட உருவத்தில் வந்து கல்யாணம் புரிந்து திருமணக் கோலத்தில் சீனிவாசபெருமாள் இத்தலத்தில் காட்சியளிக்கிறார். ஆண்டு தோறும் பங்குனித்திருவிழா மிக விமரிசையாக நடப்பது வழக்கம்.
இந்தாண்டு கடந்த 11ம் தேதி காலை கொடியேற்றத்துடன் பங்குனி திருத்தேர்விழா துவங்கியது. அன்று முதல் பெருமாள் தாயார் தினமும் காலை பல்லக்கிலும் மாலை பல்வேறு வாகனங்ளிலும் வீதியுலா நடந்து வருகிறது.
ஆண்டுக்கு இரண்டு முறை மட்டும் நடக்கும் உலகப்பிரசித்தி பெற்ற கருடசேவை நிகழ்ச்சி இன்று மாலை ஏழு மணிக்கு நடக்கிறது. மாலை கல்கருடபகவான் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் விசேஷ ஆராதனைகளோடு மூலவர் சன்னதியில் இருந்து முதலில் நான்கு பேர், அடுத்து எட்டு பேர், அடுத்து 16 பேர், 32 பேர், 64 பேர் என படிப்படியாக நபர்கள் கூடி கருடபகவானை சுமந்து ஆடி வருவது ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கருடபகவான் நீந்திவருவது போல் கண்கொள்ளாக்காட்சியாக அமைவதை அனைவரும் கண்டு தரிசனம் செய்வர்.
source : Dinamalar |
|
|
|
|
|