|
வசதிகள் இருந்தும் வளம் பெறாத செட்டிநாடு Mar 18, 11 |
|
கோட்டையூர், பள்ளத்தூர், கானாடுகாத்தான் பேரூராட்சி; வடகுடி, கொத்தமங்கலம், ஓ.சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி, செட்டிநாடு, திருவேலங்குடி, மானகிரி, பாதரக்குடி, ஆலங்குடி, மேலமகானம், நடுவிக்கோட்டை, கண்டரமாணிக்கம், கம்பனூர், நாச்சியாபுரம், குன்றக்குடி, வைரவன்பட்டி, கல்லல், செம்பனூர், அரண்மனை சிறுவயல், பனங்குடி, நடராஜபுரம், சாத்தரசன்பட்டி, வெற்றியூர், இலுப்பக்குடி, வேப்பங்குளம், ஆலம்பட்டு, குறுந்தம்பட்டு, தேவபட்டு, விசாலயன்கோட்டை, கூத்தலூர், பொய்யலூர், சன்னமடம், சாத்தம்பட்டி பகுதிகள் திருப்புத்தூர், சிவகங்கை தொகுதிகளில் இணைக்கப்பட்டுள்ளன.
இத்தொகுதியில் தொழில் நிறுவனங்கள் இல்லை. போதிய வசதிகள் இருந்தும் எந்த தொழிற்சாலைகளும் துவக்கப்படவில்லை. இதற்காக எம்.எல்.ஏ., க்கள் யாரும் முயற்சி எடுத்ததாக தெரியவில்லை. கல்வி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பிற்காக மாவட்டம் விட்டு, மாவட்டம் இடம்பெறும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இங்கு 1,500 ஏக்கரில் செட்டிநாடு கால்நடை பண்ணை உள்ளது. இங்குள்ள காலி இடங்களில் விமான தளம் அமைத்து, சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் விமான போக்குவரத்து (டொமஸ்டிக் ஏர்வேஸ்) துவக்கலாம். காரைக்குடி, தேவகோட்டை நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்ட பணி செயல்படுத்தப்படவில்லை. அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் பெருகி கொண்டே செல்கின்றன. முறையான வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் பிரச்னை உள்ளது. காரைக்குடி, சுற்றுப் பகுதியில் ஏராளமான நூற்பு ஆலைகள் இருந்தன. நூல் விலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இத்தொழில் முடக்கப்பட்டு, விரல் விட்டு எண்ணும் வகையில், ஒரு சில ஆலைகளே இயங்கி வருகின்றன. இத்தொழிலுக்கு புத்துணர்வு ஊட்டும் வகையில் மத்திய, மாநில அரசுகள் செயல்படவில்லை.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆத்தங்குடி, கானாடுகாத்தான் தேவகோட்டை, பள்ளத்தூர், சுற்றுப்புற பகுதிகளில் செட்டிநாடு பாரம்பரிய வீடுகள் உள்ளன. பிள்ளையார்பட்டி, குன்றக்குடி என, ஏராளமான கோயில்கள் உள்ளன. இவற்றை மையமாக கொண்டு, சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், "பாரம்பரிய நகர் மேம்பாட்டு திட்டம்' உருவாக்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கனரக தொழிற்சாலைகளை இத்தொகுதியில் நிறுவினால், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகிடைக்கும். முடங்கி கிடக்கும் சுற்றுலா வளர்ச்சி திட்டத்தை முடுக்கி விடவேண்டும். வெளிநாட்டினர் வருகையால் வருவாய் உயரும். சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மருத்துவ கல்லூரி அமைக்க முயற்சி எடுப்பது அவசியம்.
source : Dinamalar |
|
|
|
|
|