Nagaratharonline.com
 
கச்சத்தீவும் தமிழக மீனவர்களும்  Apr 8, 11
 
1974-1976-ம் ஆண்டுகளில் தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்க இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்குப் பின்னர் நாள்தோறும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள்

டச்சுக்காரர்கள் இலங்கையை அடிமைப்படுத்திய காலத்தில் உருவாக்கிய இலங்கை வரைபடத்தில் கச்சத்தீவு இல்லை. கி.பி.1600-ம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் ஆட்சி வெளியேறியது வரை, ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குச் சொந்தமாக இருந்ததற்கான ஆவணங்கள் உள்ளன. சுதந்திரத்துக்குப் பின்னர் 1948-ல் ஜமீன் ஒழிப்புச் சட்டப்படி, கச்சத்தீவு தமிழக அரசுக்குச் சொந்தமாக்கப்பட்டது

தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை, நட்பு முறையில் மத்திய அரசு இலங்கைக்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டது.

முதல் ஒப்பந்தம் 1974-ல் கையெழுத்தானது. இந்திரா காந்தியும், சிறிமாவோ பண்டார நாயகாவும் கையெழுத்திட்டார்கள். நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சர்தார் சுவரண்சிங் பேசியது -

""பாக் நீரிணையில் உள்ள கச்சத்தீவு முக்கால் சதுர மைல் அளவுள்ளதாம். இந்த ஒப்பந்தத்தை நாம் உறுதி செய்கிறபோது, மீன் பிடிக்கும் உரிமை, பண்டிகைக்கான சுற்றுலா, கப்பல் போக்குவரத்து போன்ற உரிமைகள் கடந்த காலத்தில் இரு நாடுகளுக்கும் இருந்தது. வருங்காலத்துக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை மாண்புமிகு அங்கத்தினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுமென நினைவுபடுத்துகிறேன்

இவ்வொப்பந்த அடிப்படையில் இந்திய மீனவர்களும் யாத்ரீகர்களும் கச்சத்தீவுக்குப் போய் வருவதற்கு இதுவரை பெற்றிருந்த உரிமைகளைத் தொடர்ந்து அனுபவிப்பார்கள். எனவே, போக்குவரத்து அனுமதி ஆவணங்களையோ அல்லது விசா போன்றவற்றையோ வேண்டுமென இலங்கை அரசு கோர முடியாது".

கச்சத்தீவை திரும்பப் பெறக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா, அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியன், ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி உள்ளிட்டோர் முழக்கமிட்டனர். அதற்கு 31.8.2010 அன்று பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, கச்சத்தீவு ஒப்பந்தம் புனிதமானது, பவித்திரமானது அதனை ரத்துசெய்ய முடியாது'' என்றெல்லாம் கூறியுள்ளார்.

பாக். நீரிணையிலும் மன்னார் வளைகுடாவிலும் இந்திய மீனவர்களுக்கு உள்ள உரிமைகளைப் பேணிக்காக்க வேண்டிய கடமையில் இருந்து மத்திய அரசு விலகி நிற்கிறது. தமிழக அரசு இதற்கு உடந்தையாக வேடிக்கை பார்க்கிறது.

source : Dinamani