Nagaratharonline.com
 
சிவகங்கை: பள்ளி செல்லா குழந்தைகள் கல்வி பெறுகின்றனர்: கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் நாச்சியார  Nov 10, 09
 
பள்ளி செல்லா குழந்தைகள் கல்வி பெறுகின்றனர்: கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் நாச்சியார் தகவல்


சிவகங்கை: மாவட்டத்தில் 1, 286 பள்ளி செல்லா குழந்தைகள், கண்டறியப்பட்டு பள்ளியில் சேர்க்கப் பட்டுள்ளனர் என அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பி.நாச்சியார் தெரிவித்தார்.அவரது சிறப்பு பேட்டி:
அனைவருக்கும் கல்வி திட்ட செயல்பாடு எப்படி உள்ளது?.
மாவட்டத்தில் 1, 483 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுகிறது.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எளிய முறையில் பாடம் கற்பிப்பது குறித்து செயல்வழி கற்றல், கம்ப்யூட்டர் பயிற்சி தருகிறோம்.
பள்ளி கட்டடங்களுக்கு எவ்வளவு நிதி வந்துள்ளது?.
நடப்பு ஆண்டில் 29 பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்ந்துள் ளன. இங்கு தலா மூன்று வகுப்பறை, கழிப்பறை, குடிநீர் தொட்டி, 137 பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிப்பறை கட்டப்பட உள்ளது.இவற்றிக்கு ஒரு கோடியே 79 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. 212 பள்ளிகளுக்கு 3,496 டேபிள், சேர்கள் வந்துள்ளன. இதன் மூலம் 20 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுவர்.
பள்ளி செல்லா குழந்தைகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டுள்ளதா?
மாவட்டத்தில் 1, 286 பேர் பள்ளி செல்லவில்லை என கண்டறியப்பட்டது. 14 வயதிற்கு உட்பட்டோருக்கு கோடைகால பயிற்சி, உறைவிடப்பள்ளி, மாலைநேர பள்ளிகளில் பாடம் நடத்தினோம். தற்போது பள்ளியில் சேர்த்து படித்து வருகின்றனர்.
ஊனமுற்ற மாணவர்களுக்கு எவ்விதமான உதவிகளை செய்கிறீர்கள்?.
இங்கு 2,699 ஊனமுற்ற மாணவர்கள் கண்டறியப்பட்டனர்.
இவர்களுக்கு அடையாள அட்டை தரப்பட்டுள்ளது.கல்வி உதவிதொகை வழங்கப்படுகிறது. ஊனமுற்ற மாணவர்களுக்கு தேவைப்படும் கருவிகளை பெங்களூருவில் ஆர்டர் செய்துள்ளோம். அவை வந்தபின் வினியோகிக்கப்படும். இது தவிர மருத்துவ முகாம்கள் மூலம் சிகிச்சை தரப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Source:Dinamalar 10/11/09