Nagaratharonline.com
 
காரைக்குடி தொகுதியில் அதிமுக அமோக வெற்றி  May 14, 11
 
காரைக்குடி, மே 13:சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சோழன் சித.பழனிச்சாமி 19,359 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரும் ஏற்கெனவே 5 முறை தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்தவருமான கே.ஆர்.ராமசாமியைத் தோற்கடித்தார்.
தொகுதி மறுசீரமைப்புக்குப் பின், திருவாடானை தொகுதியில் இருந்த தேவகோட்டை ஒன்றியம், தேவகோட்டை நகராட்சி ஆகியவை காரைக்குடி தொகுதியில் சேர்க்கப்பட்டன.
இதையடுத்து நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில், காரைக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் சோழன் சித.பழனிச்சாமியும், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளரும் ஏற்கெனவே திருவாடானை தொகுதியில் 5 முறை எம்எல்ஏவாக இருந்தவருமான கே.ஆர். ராமசாமியும் போட்டியிட்டனர். மேலும், பாஜக, இந்திய ஜனநாயக கட்சி மற்றும் சுயேச்சைகள் உள்பட 10 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருந்தனர்.
காரைக்குடி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை முருகப்பா கலையரங்கத்தில் 19 சுற்றுகளாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக வேட்பாளர் சோழன் சித. பழனிச்சாமி 85,926 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் கே.ஆர். ராமசாமி 66,567 வாக்குகளும் பெற்றனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் அதிமுக வேட்பாளர் முன்னிலை வகித்தார். 5-வது சுற்றில் அதிமுக வேட்பாளர் பழனிச்சாமி 24,142 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ராமசாமி 19,046 வாக்குகளும் பெற்றிருந்தனர். வாக்கு வித்தியாசம் 5 ஆயிரத்தை தாண்டியதால் கே.ஆர். ராமசாமி வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறினார்.
மற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
வி. சிதம்பரம் (பாஜக) 4,181, என். பாலுசாமி (பகுஜன் சமாஜ்) 2,267, எஸ். ஆசைத்தம்பி (இந்திய ஜனநாயகக் கட்சி) 3,826, எஸ். ஆனந்தகுமார் (ஜே.எம்.எம்.) 997, சுயேச்சைகள் ஆர். கரசிங்கம் 885, யு. மகேஸ்வரன் 743, கே. ரபீக்ராஜா 772, ஆர். ராஜ்குமார் 1,728.
சிவகங்கை மாவட்டத்திலேயே காரைக்குடியில்தான் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

Source:Dinamani