|
ஈ.சி.ஆர்., ஆறு வழிப்பாதைக்கு நில ஆர்ஜித பணி விரைவில் துவக்கம் Jun 16, 11 |
|
கிழக்கு கடற்கரை சாலையில், ஆறுவழிப்பாதை அமைக்கும் திட்டத்திற்கான நில ஆர்ஜிதப் பணிகள் விரைவில் துவக்கப்படவுள்ளன. இப்பணிகளுக்காக, 350 கோடி ரூபாய் நிதி திருத்திய மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை புறநகரில் உள்ள பிரதான சாலைகளில் ஒன்று கிழக்கு கடற்கரை சாலை. திருவான்மியூரில் இருந்து துவங்கும் இச்சாலையில் ஏராளமான ரிசாட்ஸ்கள், கேளிக்கை அரங்குகள், படகு குழாம், தீம் பார்க்குகள், முதலைப் பண்ணை, புலிக்குகை, மகாபலிபுரம் ஆகிய பொழுதுபோக்கு சுற்றுலாத்தலங்கள் உள்ளன. இதனால், இச்சாலையில் போக்குவரத்திற்கு குறைவிருக்காது. ஐ.டி., நிறுவனங்கள் பெருகிய பின், வார விடுமுறை நாட்களில், 24 மணி நேரமும் அதிகளவிலான போக்குவரத்து காணப்படும்.
திருவான்மியூரில் இருந்து சோழிங்கநல்லூர் எல்லைக்குட்ட அக்கரை வரை 11.4 கி.மீ., தூரத்திற்கு ஆறுவழிப்பாதை அமைக்கப்படவுள்ளது. அதற்கு சாலையின் இருபுறமும் 9.1.6 எக்டேர் நில ஆர்ஜிதம் செய்ய வேண்டியுள்ளது. திருவான்மியூரில் இருந்து கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் நில ஆர்ஜிதம் செய்ய வேண்டியுள்ளது. இதில், மூன்று பகுதிகளில் அதிகளவு நில ஆர்ஜிதம் செய்ய வேண்டும். நில எடுப்பு தொடர்பாக 15/2 விதிமுறையின் படி கடந்த ஆண்டு இறுதியில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நில எடுப்பு தொடர்பாக ஆட்சேபம் தெரிவிப்பவர்களிடம் கருத்துக்களை கேட்ட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் கூற்று நியாயமாக இருக்கும் பட்சத்தில், பரிசீலனை செய்து முடிவெடுக்கப்படும். இல்லாவிட்டால், 15/1 விதிமுறையின் நில ஆர்ஜிதம் செய்யப்படும். சாலை விரிவாக்கத்திற்காக நிலங்களை தருபவர்களுக்காக, 350 கோடி ரூபாய் திருத்திய மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் நில ஆர்ஜிதப் பணிகள் துவங்கப்படவுள்ளன. மேலும், சோழிங்கநல்லூர் அக்கரையில் இருந்து மகாபலிபுரம் வரை உள்ள சாலையை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் (டி.என்.ஆர்.டி.சி.,) விரிவாக்கம் செய்யும் பணிகளில் ஈடுபடும்.
இவ்வாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
source : Dinamalar |
|
|
|
|
|