Nagaratharonline.com
 
சென்னை புறநகர்ப் பகுதிகளில் மினி பஸ்கள் இயக்கப்படுமா ?  Jun 23, 11
 
தற்போது சென்னை புறநகர் பகுதிகளாக விளங்கும் சில இடங்களில் போக்குவரத்து வசதிகளின்றி அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள்.

சென்னையில் 680 வழித்தடங்களில் மொத்தம் 3,421 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை பெரும்பாலும் நகரின் எல்லா இடங்களையும் இணைத்து விடுகின்றன.

ஆனால், புறநகர் பகுதிகளில் உள்ள சில இடங்களில் அரசு பஸ்கள்இயக்கப்படுவதில்லை. சாலை வசதி, குறைந்த நிறுத்தங்கள் உள்ளிட்ட சில காரணங்களால் பஸ் போக்குவரத்து இப்பகுதிகளில் இல்லை. குறிப்பாக, சென்னையின் புறநகர் பகுதிகளாக விளங்கும் பல்லாவரம், கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், வண்டலூர், காட்டாங்குளத்தூர், படப்பை, முடிச்சூர், மாமல்லபுரம், கிழக்கு கடற்கரைச்சாலை உள்ளிட்ட இடங்களில் ரூட் பஸ்கள் இயங்குவதில்லை.

மேற்கூறிய ஒவ்வொரு பகுதிகளிலும் சுமார் 3000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் ஒவ்வொரு ஊர் பகுதியிலும் ஏராளமான சிற்றூர்களும் இருக்கின்றன. இந்த சிற்றூர்களில் தங்கியுள்ள மக்கள் தங்களின் ஒவ்வொரு தேவைகளுக்கும் தங்கள் பகுதிகளிலிருந்து மேலே குறிப்பிட்ட பிரதான ஊர்களுக்கு வரவேண்டும். இதற்காக இவர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது 5 கிலோமீட்டரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவு வரை பயணம் செய்ய வேண்டியிருக்கிறது.

இதனால் ஆட்டோக்களுக்கு மட்டும் தினம் ரூ. 150லிருந்து ரூ. 300 வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆட்டோ ஓட்டுநர்களும் ஆட்டோ கட்டணங்களை பன்மடங்கு உயர்த்துகின்றனர்.

இதனால் பொருளாதார ரீதியாகவும் இந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே சென்னை புறநகர் பகுதிகளில் மினி பஸ்களை இயக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

மினி பஸ்கள் குறித்த அறிவிப்பு செயல்படுத்தப்படுமா? கடந்த திமுக ஆட்சியின் போது புறநகர் பகுதிகளில் மினி பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் புறநகர்வாசிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். போக்குவரத்துத் துறையும் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தது. ஆனால், பஸ் இன்ஜின் தயாரிப்பு உள்ளிட்ட சில காரணங்களால் இந்த திட்டம் அப்போது தாற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மினி பஸ் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.


source ; Dinamani