Nagaratharonline.com
 
நூல்விலை உயர்வால் செட்டிநாடு காட்டன் சேலை உற்பத்திக்கு சிக்கல்  Jul 5, 11
 
காரைக்குடி : நூல் விலை உயர்வால் காரைக்குடி "செட்டிநாடு காட்டன் சேலை' உற்பத்தியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இங்கு, ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் நெசவு தொழில் செய்கின்றனர். இங்கு தயாராகும் செட்டிநாடு காட்டன் சேலைகள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், நகரத்தார் இச்சேலைகளை விரும்பி வாங்குகின்றனர். தரமான நூல், எளிதில் சாயம் போகாது, நீண்ட நாள் உழைக்கும் சிறப்பு கொண்டவை. இதனால் செட்டிநாடு காட்டனுக்கு மவுசு அதிகம்.



நலிவு : தற்போது, காட்டன் சேலைக்கான நூல் விலை உயர்ந்துவிட்டது. அதிக விலைக்கு நூல் வாங்கி நெய்ய, முன்வரவில்லை. நெசவில் போதிய வருமானம் இல்லை. தொழில் நசிகிறது. நெசவாளர்கள் பிழைப்பிற்காக வெளிமாவட்டம் செல்கின்றனர். தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக காட்டன் சேலை உற்பத்திக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.



இது குறித்து குருநாதன் (70) கூறுகையில், ""கணவன், மனைவி வேலை செய்தால், இரண்டு நாளில் ஒரு சேலை நெய்யலாம். சேலைக்கு 130 ரூபாய் சம்பளம். மாதம் 15 சேலைகள் நெய்வோம். விலைவாசி உயர்வால், குடும்பம் நடத்த இந்த வருமானம் போதுமானதாக இல்லை,'' என்றார்.



மகேஷ்வரி (62), கூறுகையில், ""கணவர் இறப்பிற்கு பின், நெசவு தொழில் செய்கிறேன். காட்டன் சேலை கோடையில் அதிகளவில் விற்கும். நூல் விலை உயர்வால், தொழிலை பலர் கைவிட்டனர். இதனால் சேலை உற்பத்திக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.



கைத்தறி நெசவாளர் சங்க மாவட்ட செயலாளர் பழனியப்பன் கூறுகையில், "" ஐந்து ஆண்டுகளாக நெசவு தொழிலில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நூல் விலை, சாயபவுடர் விலை உயர்ந்துவிட்டது. ஆனால், கூலியை உயர்த்தவில்லை. இங்கு 650 தறி மூலம் மாதம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேலைகள் உற்பத்தியாயின. தற்போது, 12,000 மட்டுமே உற்பத்தியாகிறது,'' என்றார்

Source:Dinamalar