|
பொன்னமராவதி நகரில் சுகாதாரக்கேடு அபாயம் Jul 22, 11 |
|
பொன்னமராவதி, ஜூலை 21: பொன்னமராவதி பேரூராட்சிக்குள்பட்ட வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகருக்குள்ளேயே கொட்டி எரிப்பதால் சுகாதாக்கேடு ஏற்பட்டுள்ளது.
பொன்னமராவதி தேர்வுநிலைப் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் பொன்னமராவதி அழகப்பா அம்பலகாரர் சாலையோரத்திலும், புதுப்பட்டி மலையாண்டி கோயில் சாலையோரத்திலும், திருமேனிக் கண்மாய் கரையோரத்திலும் கொட்டப்படுகின்றன.
இதனால், இந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், குப்பைகளை அங்கேயே வைத்து எரியூட்டுவதால் அந்தப் பகுதியே புகை மண்டலமாகிவிடுகிறது.
மேலும், சுற்றுச்சூழல் சீர்கேடு அடைந்து, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
துர்நாற்றம் காரணமாக பொதுமக்கள் இந்தச் சாலைகளில் நிம்மதியாகச் செல்ல முடியவில்லை. ஓட்டமும், அதிவேக நடையுமாகவே செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக, குழந்தைகள், முதியவர்களின் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
மேலும், மழைக் காலங்களில் அந்தச் சாலை வழியாக யாரும் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே, பேரூராட்சி நிர்வாகத்தினர் குப்பைகளை நகருக்கு வெளியே கொட்டி, அழிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலர் ராஜா கூறியது:
பொன்னமராவதி- மதுரை சாலையில் உள்ள திருமேனிக் கண்மாய் ஓரத்தில் கொட்டப்படும் குப்பை, மருத்துவமனைக் கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அவ்வப்போது, குப்பைகளை எரியூட்டுவதால் எழும் புகை மண்டலம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்னையில் பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியமாக இருந்தால் மக்கள் நோய் பாதிப்புக்கு ஆளாக நேரிடும்.
எனவே, பேரூராட்சி நிர்வாகத்தினர் குப்பைகளை நகருக்கு வெளியே கொட்டி அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
Source:Dinamani |
|
|
|
|
|