|
சிவகங்கை: கோலப்பொடி தயாரிப்பில் சிவகங்கைதொழிலாளர்கள் சுறுசுறுப்பு: கார்த்திகை, மார்கழியில் Nov 18, 09 |
|
கோலப்பொடி தயாரிப்பில் சிவகங்கைதொழிலாளர்கள் சுறுசுறுப்பு: கார்த்திகை, மார்கழியில் தீவிரம்
சிவகங்கை: இந்துக்களின் புனித மாதங்களாக கருதப்படும் கார்த்திகை, மார்கழியில் கோலப்பொடி தயாரிப்பில் சிவகங்கை தொழிலாளர்கள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனர். காலையில் எழுந்து வாசலில் கோலமிடுவது இந்துக்களின் பண்பாடு. அரிசி மாவில் கோலமிட்டு, அதை எறும்புகள் மொய்த்தால், "சிறு உயிரினத்திற்கும் உணவு அளிப்பது, லட்சுமி வாசம் செய்ய வருகிறாள்...' என நம்புகின்றனர்.
புனித மாதங்கள்: இந்துக்களின் புனித மாதங்களான (ஐயப்பனுக்கு உகந்த) கார்த்திகை, மார்கழி (ஆண்டாளுக்கு உகந்த) நெருங்குவதால் கோலப்பொடி தயாரிப்பில் தொழிலாளர்கள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனர். மார்கழி முழுவதும் கோலத்தின் நடுவே பசுமாட்டு சாண உருண்டையை வைத்து அதில் பூசணி பூவை சொருகி ஆண்டாளை பெண்கள் வழிபடுகின்றனர். இவர்களின் கோலப்பொடி தேவையை பூர்த்தி செய்ய என்.வைரவன்பட்டி, திருப்புத்தூர், சிங்கம்புணரி பகுதியில் கிடைக்கும் வெள்ளை கற்கள் கொண்டுவரப்படுகிறது. கல் குவாரிகளிலிருந்து கிடைக் கும் கற்களை சேகரித்து கோலப்பொடி தயாராகிறது.
திருப்புத்தூர் ராமசாமி கூறுகையில், ""20 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபடுகிறேன். வெள்ளை கற்களை உரலில் போட்டு தயாரிக்கிறோம். இங்கு சொற்ப எண்ணிக்கையில் தான் கோலப்பொடி தயாராகிறது. சிவகங்கையில் தயாராகும் பொடி போதுமானதாக இல்லை. இதற்காக மதுரை, நெல்லை, விருதுநகர், நத்தம் சிறுகுடியிலிருந்து பொடிகளை வாங்கப்படுகிறது. தினமும் வியாபாரிகள் நூறு படிகளுக்கு மேல் வாங்கி விற்கின்றனர். கோலப்பொடி ஒரு படி 10 . கலர் பொடி பாக்கெட் 3 ரூபாய்க்கும் விற்கின்றனர். மாதம் நான்காயிரம் ரூபாய் கிடைக்கிறது. கார்த்திகை முதல் தை மாதம் வரை இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதால் கூடுதலாக விற்பனையாகும். இத்தொழிலை ஊக்கப்படுத்த வங்கி கடன் வழங்கவேண்டும்'' என்றார்.
ஏற்றுமதி வாய்ப்பு: சிவகங்கையில் கோலப்பொடி தயாரிப்பு, விற்பனையில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். தேவையான முதலீடு இல்லாததால் கோலப்பொடி உற்பத்தி நலிவடைந்து வருகிறது. வங்கி கடன் வழங்குவதில் உள்ள கெடுபிடிகளை தளர்த்தி சுலபமாக இவர்கள் கடன் பெற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
Source: Dinamalar 18/11/09 |
|
|
|
|
|