Nagaratharonline.com
 
அரசு கேபிள் "டிவி' : 70 ரூபாய் கட்டணத்தில் 90 சேனல்கள் வசதி  Aug 31, 11
 
"கேபிள் டிவி' சேவை, செப்., 2ம் தேதி முதல் துவங்கும் என்று, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அரசு "கேபிள் டிவி'யில் மாதக்கட்டணம் 70 ரூபாயில், 90 சேனல்கள் தெரியும் என்றும் அறிவிக்கப்பட்டது.


31 மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ள ஒளிபரப்பு மையங்களை, 24 மணி நேரமும் பராமரிக்கவும், ஒளிபரப்பு சேவையை தங்குதடையின்றி மக்களுக்கு வழங்கவும், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அரசு "கேபிள் டிவி' ஒளிபரப்பின் மூலம், கட்டணச் சேனல்கள் உட்பட 90 சேனல்களை ஒளிபரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதலில் இலவச சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படும். கட்டணச் சேனல்களை பெற, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


"அரசு, "கேபிள் டிவி' ஒளிபரப்பைப் பெற, பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்ற கேள்விக்கு, அரசு "கேபிள் டிவி' நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:"கேபிள்' ஆபரேட்டர்கள் அரசுடன் இணைந்துள்ளதால், தற்போது, "கேபிள்' இணைப்பு பெற்றுள்ள பொதுமக்கள், அந்த இணைப்பிலேயே, அரசு "கேபிள் டிவி' இணைப்பை பெற முடியும். அரசு, "கேபிள் டிவி'யைப் பெற, அவர்கள் தனியாக யாரையும் அணுக தேவையில்லை.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

"சட்டச் சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டு, இன்னும் மூன்று மாதங்களுக்குள் சென்னையிலும் அரசு, "கேபிள் டிவி' கால் பதிக்கும்' என, அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

source : Dinamalar