Nagaratharonline.com
 
செட்டிநாடு பாத்திர தொழில் நலிவு... தொழிலாளர் பற்றாக்குறையால் பாதிப்பு  Nov 20, 09
 
காரைக்குடி:மூலப்பொருள் விலை உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறையால் செட்டிநாடு எவர்சில்வர் பாத்திர தொழில் நலிவடைந்து வருகிறது.காரைக்குடி முத்துப்பட்டணம் காமன் பண்டிகை தெருவில் எவர்சில்வர் பாத்திரங்கள் தயாரிப்பு தொழில் நடக்கிறது. பால் குடம், முளைப்பாரி சட்டி, தெக்கலூர் செம்பு, வாளி, நெய் வாளி, கொட்டான் உள்ளிட்ட செட்டிநாடு பாத்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன. தயாரிக்க பயன்படுத்தும் தகடு தடிமனாக (கேஜ்) இருப்பதால் தமிழகம் முழுவதும் அதிக வரவேற்பு உள்ளது.

இத்தொழிலில் எட்டு மணி நேரம் ஈடுபடும் தொழிலாளிக்கு 100 முதல் 120 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக சம்பளம் கட்டுபடியாகாமல், பலர் இத்தொழிலை கைவிட்டு மாற்று வேலைக்கு செல்கின்றனர். தொழிலாளர் பற்றாக்குறையால் இத்தொழில் நலிவடைந்துள்ளது. வேலை கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் இத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.இவர்களின் குடும்பம் வறுமையில் சிக்கியிருப்பது வேதனையான விஷயம்.முகூர்த்த காலங்களில் பாத்திரங்களின் தேவை அதிகரிப்பதால், உற்பத்திக்கு போதிய ஆட்கள் இன்றி உற்பத்தியாளர்கள் பரிதவிக்கின்றனர். இதுவே இத்தொழிலின் நலிவுக்கு ஒரு முன்னுதாரணம்.

தொழிலாளி ராதாகிருஷ்ணன்: கடந்த 30 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளேன். வேலைக்கு தகுந்த சம்பளம் கிடைக்காததால், பலர் வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர். விலை வாசி உயர்வும் ஒரு காரணம். வறுமை, வயது முதிர்வால் பலர் இத்தொழிலை விடாமல் செய்து வருகின்றனர்.
ஓரளவு வசதி உள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர். தொழிலாளர்களின் வறுமையை போக்க, அரசு நிதி உதவி வழங்க வேண்டும்.
எவர்சில்வர் உற்பத்தியாளர் சங்க செயலாளர் வெள்ளைச்சாமி: கடந்த 30 ஆண்டுகளாக பட்டறை, கடை நடத்தி வருகிறேன். துவக்கத்தில் மைசூர் பானை, அண்டா, குடங்கள், வீட்டு உபயோக பாத்திரங்கள் தயாரித்தேன். அதிக தேவை இருந்ததால் பட்டறையை விரிபடுத்தினேன். 30 பேர் வேலை செய்தனர். தினமும் 60 கிலோ வரை உற்பத்தியானது. மதுரை, பொன்னமராவதி, ராமநாதபுரம், சிவகங்கை, தேவகோட்டைக்கு பாத்திரங்கள் சப்ளை செய்யப்பட்டன.
நல்ல வருவாய் கிடைத்ததால் தொழிலாளர்கள் பயனடைந்தனர். தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
எவர்சில்வர் தகடு விலையில் ஏற்றம், இறக்கம் இருந்ததால் விலை உயர்ந்த பாத்திரங்கள் தயாரிப்பில் சிக்கல் ஏற்பட்டது. பொதுவான விலைவாசி உயர்வால் தொழிலாளர்களுக்கு சம்பளம் கட்டுபடியாகவில்லை.பலர் வேலை தேடி வெளிநாடு, வெளி மாவட்டங்களுக்கு சென்று விட்டனர். ஆட்கள் பற்றாக்குறையால் உற்பத்தி குறைந்து, தொழில் நலிவடைந்துள்ளது. இதை நம்பி உள்ள தொழிலாளர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும். அப்போது தான் தொழில் மீண்டும் சீராகும்.

Source: Dinamalar - Nov 20, 2009