Nagaratharonline.com
 
காரைக்குடி பஸ் நிலையச் சாலையில் மரங்கள் வெட்ட இடைக்காலத் தடை  Sep 12, 11
 
காரைக்குடி புதிய பஸ் நிலையச் சாலையோரத்தில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட மரங்களை விறகுக்காக வெட்ட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடைவிதித்தது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இதுதொடர்பாக, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பாரத மனித உரிமை இயக்கத் தலைவர் எஸ்.டி.கருப்பையா தாக்கல் செய்த மனு:
காரைக்குடி விரிவாக்கப் பகுதியான புதிய பஸ்நிலையச் சாலையில் பெரியார் சிலை சந்திப்பு முதல் பஸ் நிலையம் அருகில் வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு சாலையின் இருபுறமும் வேம்பு, புன்னை, அரசு உள்ளிட்ட மரங்கள் 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடப்பட்டு நன்கு வளர்ந்துள்ளது.
இந்தப் பகுதியில் பசுமை வளையமாகவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையிலும் உள்ள இம்மரங்களை வெட்டிவிட காரைக்குடி நகராட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இவற்றை வெட்ட ஏலம் விடப்பட்டு தற்போது மரங்களை வெட்ட ஆரம்பித்துவிட்டனர். இதனால் இப்பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன். பாதசாரிகள் ஒதுங்கிநிற்க நிழல் இருக்காது.
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என அரசு வலியுறுத்திவரும் நிலையில் இருக்கும் மரங்களைக் காப்பாற்ற வேண்டும்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், மரங்களை வெட்ட இடைக்காலத் தடை விதித்தது.

source : Dinamani