Nagaratharonline.com
» All
» Chettinad Toursim
» Chettinad Temples
Chettinad Temples
     
Arulmigu Kannathal Temple, Nattarasankottai

 


வட்டமான முகம், விரிந்த விழிகள், அனலான பார்வை, கையில் திரிசூலம், வலதுகால் மடக்கியிருக்க, இடது காலடியின் கீழ் மிதிபடும் ஆணுருவம். இப்படி ஆக்ரோஷத்துடன் காட்சியளிக்கிற அம்மன், கண்ணாத்தாள். வளையல் ஓசை கேட்க வேண்டிய கையில் வாள். முறுக்கேறிய கொம்புகளிருக்கும் மான் மேல் நின்று மகடாசுரனை வதைத்தவள் – என்றெல்லாம் இளங்கோவடிகளால் சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்படும் கொற்றவைதான் இந்த அம்மன்.

 


சிவகங்கையிலிருந்து எட்டு கி.மீ. தூரத்திலிருக்கும் நாட்டரசன் கோட்டையில் இருக்கும் கண்ணாத்தாள் பற்றி செவிவழியாக நிறையக் கதைகள். பராசக்தி என்கின்றனர் சிலர். ‘கண்ணுடைய நாயகி அம்மன் பள்ளு’ என்கிற சிற்றிலக்கியத்தைப் படைத்திருக்கிற முத்துக் குட்டிப் புலவர், ஆறு சகோதரிகளுடன் கண்ணுடைய நாயகி தோன்றியதாகச் சொல்கிறார். ஆனாலும் இந்த மாவட்டத்து மக்களின் மொழியில் உள்ளே இருக்கும் அம்மன் ‘கண்ணாத்தாள்.’ ‘அவிச்ச நெல்லும் இங்கே முளைக்கும்’ என்று சொல்கிறார்கள் மகிமையுடன்.

 


natpu

 

பழமையைச் சொல்கிற கம்பீரத்துடனிருக்கிறது இந்தக் கோயில். உள்ளே நுழையுமுன்பு கல்லில் நுட்பம் காட்டும் அழகான மண்டபம். சுற்றிலும் வீசியடிக்கும் காற்று. உள்ளே நுழைந்ததும் பிரகாரம். அம்மனுக்கு எதிரே பைரவர் நாய் வாகனத்தில் கையில் உடுக்குடன் அமர்ந்திருக்கிறார். இன்னொரு புறத்தில் வீரபத்திர சாமி.  இதையும் தாண்டிப் போனால் இருபுறமும் கருமையான காவல் பூதங்கள் கருவறைக்கு வெளியே காவல் காக்கின்றனர். உள்ளே உக்கிரக் கொற்றவையாக அம்மன், கண்ணாத்தாள். கண்ணுடைய நாயகி அம்மன்.  கண்ணில் ஏதாவது பிரச்சினை என்றால், கண்ணாத்தாளுக்கு நேர்ந்து கொள்கிறார்கள். கண் வடிவத்தில் வெள்ளியில் ‘கண் மலராக’ செய்து நேர்த்திக்கடன் படைக்கிறார்கள். இல்லாவிட்டால் நேர்ந்து கொண்டு இரு கண்களையும் மூடி, அதன்மேலே மெல்லிய துணி விரித்து கண்ணில் மாவிளக்கு வைத்தபடி படுத்திருக்கிறார்கள். நேர்ந்து கொண்டு கண் மலர் வைத்தாலோ, மாவிளக்கு படைத்தாலோ கண்ணிலுள்ள குறைபாடு நீங்கி வடுகன்றன என்பது இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை. மாவிளக்கு இடிப்பதற்காக கோயிலுக்குள்ளேயே உரல்கள் இருக்கின்றன.
இது தவிர, தீராத வயிற்று வலி, வெட்டம்மை, மணல் வாரி அம்மை வந்தால் அதற்கும் இங்கு தனி நேர்த்திக் கடன்.

 


natpu


பலவகையான அபிஷேகங்கள் நடக்கின்றன. அம்மனுக்கு மஞ்சள் பொடியில் அபிஷேகம் செய்தால் நல்ல கணவன் கிடைப்பானாம். பாலில் செய்தால் ஆயுள் விருத்தியாகுமாம். கரும்புச் சாற்றில் செய்தால் வந்த நோயெல்லாம் நீங்கி விமுமாம். இம்மாதிரி அநேக அபிஷேகங்களுக்குப் பின்னாலும் விதவிதமான நம்பிக்கைகள். நகரத்தாரால் கட்டப்பட்ட இந்தக் கோயிலைப் பராமரிப்பதும் அவர்கள்தான். சோழ நாட்டை விட்டு வெளியேறி பாண்டிய நாட்டுக்குள் நுழைந்து நகரத்தார் குடிபுகுந்த ஊர்களில் முதலாவதாக நாட்டரசன் கோட்டையைச் சொல்கிறார்கள். அந்தக்காலத்துப் பண்பு பிரதிபலிக்கிறது இந்தக் கோயில் கட்டுமானத்திலும்.


வைகாசி மாதம் பத்து நாட்கள் திருவிழா. வெள்ளி ரதம் ஓட, ஆயிரக்கணக்கில் கூட்டம் திரள்கிறது. அன்றைக்கு எதையாவது நினைத்துக் கொண்டு கண்ணாத்தாளிடம் வேண்டிக் கொண்டால் அது நிறைவேறும் என்பது ஐதீகம். அன்று கும்பிடுதனத்தைச் செலுத்திவிட்டு, தேர் ஓடும் வீதியில் சுற்றி வந்தால் பெண்களுக்குத் திருமணம் நடந்து விடுவதாகச் சொல்கிறார்கள்.

 


தை மாதத்தில் முதல் செவ்வாயன்று இன்னும் விசேஷம். கோயிலுக்கு முன்னால் இருக்கும் விசாலமான தெப்பக் குளத்தைச் சுற்றி வீட்டுக்கு ஒரு பானை என ஆயிரக்கணக்கில் அணிவகுத்து விடுகின்றன பானைகள். யார் முதலில் பொங்கல் வைப்பது?
அதற்கு ஒரு குலுக்கல் முறை நடக்கிறது. அதில் தேர்வு செய்யப்படுகிறவர் முதல் பானையில் பொங்கல் வைக்க அடுத்தடுத்து சுற்றியிருக்கும் ஆயிரக்கணக்கான பானைகள் பொங்குவது வித்தியாசமான காட்சி. குடும்பங்களுடன் பலர் ஆஜராகி விடுவதால் அந்தச் சமயத்திலேயே மணமகள் அல்லது மணமகனைத் தேர்ந்தெடுப்பதும் நடக்கிறது.  கோயிலுக்கு எதிரே இளம் பச்சைக்கலரில் சலனமில்லாமல், சுத்தமாகக் கிடக்கும் குளம். அந்த ஊருக்கு அதுதான் குடிநீர். இதற்கும் ஒரு விழா. பங்குனி மாதம் முதல் செவ்வாய் அன்று சேங்கை வேட்டு நடக்கிறது. இதற்காக எட்டு நாட்கள் விரதமிருக்கிறார்கள். எட்டாம் நாள் குளத்தில் மண்வெட்டியோடு இறங்கி தூர் வாருகிறார்கள். தூர் வாரும்போது மண்வெட்டியில் அள்ளுகிற மண்ணை மனைவியின் முந்தானையில் கோடுகிறார்கள்.


கருவறையில் தமிழில் செய்யப்படும் அர்ச்சனையும் பூஜைக்கான குரல்களும் கோயிலை வெளியேறும் வரை கேட்கின்றன.
இமைக்காத விழிப்புடன் சகலத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறாள் ‘வானோர் வணங்க மறையாகி ஞானக் கொழுந்தாய்’ நிற்பதாக சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்படும் கொற்றவையான ‘கண்ணாத்தாள்.’

Article Source: natpu.in